குடிநீர் கொடுக்க வழியில்லை கோதுமை பீர் அறிமுகம் முக்கியமா? தி.மு.க., அரசு மீது பழனிசாமி பாய்ச்சல்
குடிநீர் கொடுக்க வழியில்லை கோதுமை பீர் அறிமுகம் முக்கியமா? தி.மு.க., அரசு மீது பழனிசாமி பாய்ச்சல்
ADDED : மே 05, 2024 12:04 AM

சேலம்:''கோதுமை பீர் அறிமுகம் தான் நாட்டுக்கு முக்கியம்; குடிநீர் முக்கியம் இல்லை. எப்போது இந்த விடியா தி.மு.க., அரசு ஆட்சிக்கு வந்ததோ, அவர்கள் மதுபானத்தில் தான் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர்,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பாதையில் நடந்த விபத்தில், காயமடைந்த 9 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பழனிசாமி, பின்னர் அளித்த பேட்டி:
ஏற்காடு விபத்தில் இறந்தவர்கள், காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். தி.மு.க., அரசு, 2021 - 22 பட்ஜெட்டில் 5,000 புதிய பஸ்கள், 2022 - 23ம் ஆண்டு போக்குவரத்து மானிய கோரிக்கையில், 5,000 பஸ்கள் வாங்கப்படும் என, கூறியது. ஆனால், வாங்கவில்லை.
கடந்த, 2023 - 24ம் ஆண்டு அறிவிப்பில், 1,000 பஸ்கள் வாங்கியதாக சொல்கின்றனர். ஆனால், இதுவரை, 400 -- 500 பஸ்கள் மட்டும் வாங்கி உள்ளனர். தற்போது இயக்கப்படும் பெரும்பாலான பஸ்கள் பழுதடைந்து, ஆங்காங்கே நின்று விடுகின்றன.
பஸ் பழுதாகி பாகங்கள் கீழே விழுவதால், பயணியர் கீழே விழுந்து காயமடைகின்றனர். புதிய பஸ்கள் வாங்காமல் விடியா அரசு மக்களிடம் பொய் சொல்லி வருகிறது. பயணியர் அச்சத்தோடு பயணம் செய்கின்றனர். சில பஸ்களில் மழைக்கு ஒழுகுகின்றன. அ.தி.மு.க.,வின், 10 ஆண்டு ஆட்சியில், 14,500 புதிய பஸ்கள் வாங்கப்பட்டன.
ரகசியமாக வெளிநாட்டுக்கு செல்பவர்கள் குறித்து கேள்வி கேட்பதில்லை. நான் கால் வலிக்கு ஆயுர்வேத சிகிச்சை எடுக்க கேரளா சென்றேன். இதையெல்லாம் பட்டிமன்றம் வைத்து சொல்லிவிட்டா போக முடியும். இதுகுறித்து எல்லாம் கேவலமாக பத்திரிகையில் போடாதீர்கள்.
உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால், ஊரில் தெரிவித்துவிட்டா செல்வீர்கள். ஆயுர்வேத சிகிச்சை ஆலோசனைக்காக மூன்று நாட்கள் சென்றேன். இதில் என்ன தவறு இருக்கிறது.
முதல்வர் சைக்கிளில் சென்றால், பளு துாக்கினால், வெளிநாடு சென்றால், விளையாடினால் விளம்பரபடுத்துகிறீர்கள். வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்கள் குடிநீர் கிடைக்காமல் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அதுகுறித்து யாரும் செய்தி வெளியிடுவதில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஓய்வு எடுக்க செல்கிறார். ஓய்வு எடுப்பதை வேண்டாம் என தெரிவிக்கவில்லை. எப்போது ஓய்வெடுக்க செல்ல வேண்டும்.
வரலாறு காணாத வெயிலால் பாதிக்கப்படுவதுடன், வறட்சியால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் போராட்டம் நடத்துகின்றனர். இதில் முதல்வர் கவனம் செலுத்தவில்லை. இந்த ஆட்சியில் இருக்கும் அவலங்கள் குறித்து பத்திரிகை, ஊடகங்கள் தெரிவிப்பதில்லை.
கோதுமை பீர் அறிமுகம் தான் நாட்டுக்கு முக்கியம்; குடிநீர் முக்கியம் இல்லை. எப்போது இந்த விடியா அரசு ஆட்சிக்கு வந்ததோ, அவர்கள் மதுபானத்தில் தான் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். அதில் தான் அதிகமான வருமானம் கிடைக்கிறது. அதனால் தான் அதில் அதிகமாக கவனம் செலுத்-துகின்றனர்.
தி.மு.க., அரசு ஆட்சிக்கு வந்ததும், 1,000 தடுப்பணை கட்டுவதாக கூறினர். எத்தனை தடுப்பணை கட்டி இருக்கின்றனர். கோடையில் வறட்சி நிலவுகிறது. வரலாறு காணாத வெப்பத்தால், நாளுக்கு நாள் நிலத்தடி நீர் குறைந்து கொண்டே செல்கிறது.
குடிமராமத்து பணியை தொடர்ந்திருந்தால், 2 ஆண்டுகளாக மழைநீரை ஏரி குளங்களில் சேமித்திருக்கலாம். நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, விவசாயிகள், மக்களுக்கு தேவையான தண்ணீர் கிடைத்திருக்கும்.
மேட்டூர் உபரிநீர் திட்டம், அத்திக்கடவு மற்றும் அவினாசி திட்டம் பயன்பாட்டுக்கு கொண்டு வந்திருந்தால், மக்கள் பயன் அடைந்திருப்பர். சேலம் மாவட்டம், தலைவாசலில், 1,000 கோடியில் ஆசியாவிலே மிக பெரிய கால்நடை பூங்கா கட்டி பூட்டி கிடக்கிறது.
ஒற்றை செங்கல் உதயநிதி, ஒரு செங்கல்லை ஊர் முழுதும் காட்டிக் கொண்டிருக்கிறார். பல லட்சம் செங்கல்லால் கட்டப்பட்ட இந்த பூங்காவை திறக்க, 5 நிமிடம் போதும். இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
கோடையில் தேவையான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படாததால், அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு கிடையாது.
கர்நாடகா அரசிடம் இருந்து தமிழகத்திற்கான காவிரி நீரை கேட்காமல், தமிழகத்தின் மீது அக்கறை இல்லாத முதல்வராக ஸ்டாலின் உள்ளார். தண்ணீர் தர மறுக்கும் அரசை கண்டிக்கவும், தண்ணீருக்காக குரல் கொடுக்கவும், நீரை பெற முயற்சி எடுக்கவில்லை.
தி.மு.க., 'இண்டியா' கூட்டணியில் சேர்ந்து நாட்டு மக்களுக்கு என்ன பயன்? நியாயமாக கிடைக்க வேண்டிய தண்ணீரை கூட பெற்றுத் தர முடியவில்லை. இவர்களால் இருக்கிற உரிமையை கூட பாதுகாக்க முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.