பயன்படுத்தாத நிலங்களுக்கு என்.ஓ.சி., வீட்டு வசதி வாரியம் அலைக்கழிப்பு
பயன்படுத்தாத நிலங்களுக்கு என்.ஓ.சி., வீட்டு வசதி வாரியம் அலைக்கழிப்பு
ADDED : ஜூலை 26, 2024 08:04 PM
சென்னை:எதிர்கால திட்டங்களுக்காக கையகப்படுத்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டு, தற்போது தனியார் பயன்பாட்டில் இருக்கும் நிலங்களுக்கு தடையின்மை சான்று வழங்க, வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் அலைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது.
வீட்டுவசதி வாரியம் சார்பில் குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்த, பல்வேறு மாவட்டங்களில் நிலங்கள் தேர்வு செய்யப்பட்டன.
இதற்காக, நிலத்தை கையகப்படுத்த முதல் கட்டமாக, 'நோட்டீஸ்'கள் அனுப்பப்படும். பின், பல இடங்களில் தொடர் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால், இந்த நிலங்களை, அதன் பழைய உரிமையாளர்கள் பல்வேறு பாகங்களாக பிரித்து, விற்பனை செய்துள்ளனர்.
இதை வாங்கிய மக்கள், வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர். அவர்கள் பட்டா கேட்டு தாலுகா அலுவலகத்தை அணுகினால், வீட்டுவசதி வாரியத்திடம் இருந்து தடையின்மை சான்று எனப்படும், என்.ஓ.சி., பெற்று வர அறிவுறுத்துகின்றனர்.
இதுபோன்ற தடையின்மை சான்றிதழ்கள், அந்தந்த கோட்ட அலுவலகங்களில் செயற்பொறியாளர்களால் வழங்கப்பட்டு வந்தன. தற்போது சான்று பெற விரும்பும் மக்களை, வாரிய அதிகாரிகள் அலைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர் பி.பாலமுருகன் கூறியதாவது:
வீட்டுவசதி வாரியத்திடம் நிலங்களுக்கு தடையின்மை சான்று பெறுவதில், கோட்ட அலுவலகங்களில் அதிகாரிகள் முறைகேடு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால், தடையின்மை சான்று பெற விண்ணப்பிப்பவர்கள், சென்னையில் உள்ள தலைமையகத்தில் பணம் செலுத்த வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது.
உதாரணமாக, கோவையில் ஒரு கிரவுண்ட் நிலம் வைத்துள்ளவர், அதற்கு தடையின்மை சான்று பெற, 1,000 ரூபாய் கட்டணம் செலுத்த, சென்னைக்கு நேரடியாக வர வேண்டியுள்ளது. இது, பொதுமக்களை அப்பட்டமாக அலைக்கழிப்பதாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

