அரசு கடமையை செய்யாததே சாராய மரணத்திற்கு காரணம்: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் தகவல்
அரசு கடமையை செய்யாததே சாராய மரணத்திற்கு காரணம்: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் தகவல்
ADDED : ஜூன் 27, 2024 01:38 AM

கள்ளக்குறிச்சி: ''கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு, தமிழக அரசு கடமையை சரிவர செய்யாததே காரணம்,'' என, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் வீடுகளுக்கு, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா நேற்று நேரில் சென்று விசாரித்தார்.
முன்னதாக, கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட மருத்துவக் கல்லுாரியில் சிகிச்சை பெறுபவர்களை பார்வையிட்டு, அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகளை கேட்டறிந்தார்.
அப்போது, அவர் கூறியதாவது:
கள்ளக்குறிச்சி பகுதியில் பல காலமாக கள்ளச்சாராயம் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது; அரசும், காவல் துறையும் தடுக்கவில்லை. இந்த சம்பவத்தின் குற்றவாளி, எந்த அரசியல் கட்சியில் தொடர்பில் இருந்தாலும் அவர் குற்றவாளி தான்.
இது குறித்த அறிக்கை பிரதமரிடம் அளிக்கப்பட்டு, உரிய நீதி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். தமிழக அரசு விழிப்புணர்வு இல்லாமல், தன் கடமையை சரிவர செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய காவல் துறை டி.எஸ்.பி., ஷன்மித் கவுர், துணை இயக்குனர் தினேஷ் வியாஸ், உறுப்பினர்கள் வட்டேப்பள்ளி ராமச்சந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர்.