ADDED : ஏப் 18, 2024 12:01 AM
இந்தியாவை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஆளப் போகிறவர்கள் யார் என்பதை தீர்மானிப்பதற்கான லோக்சபா தேர்தலுக்கு, ஒருநாள் மட்டுமே உள்ளது. மத்தியில் யார் ஆட்சி அமைக்கப் போகின்றனர் என்பதை தீர்மானிப்பதைக் கடந்து, தமிழகத்தில் நடந்து வரும் மக்கள் விரோத ஆட்சிக்கு கடிவாளம் போடுவதற்கான தேர்தல் இது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தான், மத்தியில் மீண்டும் அமைய வேண்டும் என்பதே, தமிழக மக்களின் விருப்பம். இந்தியா முழுதும் வீசும் மோடி அலை தமிழகத்திலும் வீசுகிறது என்பதை பிரசாரத்தில் உணர முடிந்தது.
கடந்த 2014ல் வென்ற அ.தி.மு.க.,வின் 37 எம்.பி.,க்களும், 2019ல் வென்ற தி.மு.க., கூட்டணியில் 38 எம்.பி.,க்களும் சமூக நீதிக்காகவோ, தமிழக நலன்களுக்காகவோ குரல் கொடுக்கவில்லை.
ஆபத்தான திசையிலும், அழிவுப் பாதையிலும் பயணிக்கும் தமிழக அரசை கட்டுப்படுத்த, இந்த தேர்தலில் தி.மு.க., கூட்டணியை தோற்கடிக்க வேண்டும். மின் கட்டணம், சொத்து வரி, குடிநீர் வரி, பத்திரப்பதிவு கட்டணம், மோட்டார் வாகன வரி, அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, 10 முறை பால் விலை உயர்வு ஆகியவை தான் ஓட்டளித்த மக்களுக்கு தி.மு.க., அரசு அளித்த பரிசு.
தி.மு.க., அரசின் சாதனை என்று சொல்லிக்கொள்ள ஒன்றுகூட இல்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க.,வுக்கு, இந்த லோக்சபா தேர்தலில் தோல்வியை தண்டனையாக வழங்க வேண்டும்.
ராமதாஸ்,
பா.ம.க., நிறுவனர்

