பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தாதது ஏமாற்றும்: செயல் சி.பி.எஸ்., மீட்பு இயக்கம் கண்டனம்
பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தாதது ஏமாற்றும்: செயல் சி.பி.எஸ்., மீட்பு இயக்கம் கண்டனம்
ADDED : ஜூன் 28, 2024 07:23 AM

மதுரை : 'ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த முடியாததற்கு அரசு நிதிநிலையை காரணம் காட்டுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமம். இது முற்றிலும் ஏமாற்று வேலை' என தமிழ்நாடு பழைய ஓய்வூதிய திட்ட மீட்பு இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இயக்க ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியதாஸ் கூறியதாவது: ஆசிரியர், அரசு ஊழியர்களின் மிக பெரிய எதிர்பார்ப்பு 'புதிய ஓய்வூதிய திட்டத்தை (சி.பி.எஸ்.,) ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும்' என்பது. ஆனால் சட்டசபையில் தற்போது நடந்து முடிந்த நிதித்துறை மானியக் கோரிக்கையில், வழக்கம் போல் 'பழைய ஓய்வூதிய திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது' என நிதியமைச்சர் கூறியுள்ளார். இது சி.பி.எஸ்.,ல் உள்ள 6.5 லட்சம் அரசு ஊழியர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் அளித்த 'மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்' என்ற வாக்குறுதியை நம்பி 2021 சட்டசபை தேர்தலிலும், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலிலும் தி.மு.க., வெற்றிக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர், அவர்கள் குடும்பத்தினர் பெரும் பங்கு வகித்தனர். இந்நிலையில் இந்த மானியக் கோரிக்கையிலாவது 'நல்ல அறிவிப்பு' வரும் என எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது.
ஐந்து ஆண்டுகளாக சி.பி.எஸ்., திட்டத்தில் 35,000 ஆசிரியர்கள், அலுவலர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். ஆனால் அவர்களுக்கு மாத ஓய்வூதியம், பணிக்கொடை என எதுவும் அரசு வழங்கவில்லை. பணியின்போது இறந்தவர்களின் குடும்பங்களுக்கு குடும்ப ஓய்வூதியம், இறப்பு பணிக்கொடை (டெத் கிராஜூட்டி) வழங்கப்படவில்லை.
தற்போது சி.பி.எஸ்., திட்டத்தில் உள்ள 6.5 லட்சம் ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசின் பங்களிப்பாக ரூ.7200 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்கிறது. இந்நிதியில் இருந்து தற்போது சி.பி.எஸ்., திட்டத்தில் ஆண்டுதோறும் ஓய்வு பெறும் 5 ஆயிரம் பேருக்கு, பழைய ஓய்வூதிய திட்டம் அடிப்படையில் மாத ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட பணப் பலன் வழங்க நான்கில் ஒரு பங்கு நிதியே அரசுக்கு செலவாகும்.
முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் ஏதோ தனியாக நிதி தேவை என முதல்வரும், அமைச்சரும் கூறிவருவது ஏமாற்றும் செயல். இது கண்டிக்கத்தக்கது.
ராஜஸ்தான், பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம் உட்பட 6 மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட்ட நிலையில், தமிழக அரசு சி.பி.எஸ்., பிடித்தம் தொகையை கார்ப்பரேட் நிறுவனங்களில் முதலீடு செய்வதில் மட்டும் கவனமாக உள்ளது. உடனடியாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

