'இந்தியன் - 2' திரைப்படத்திற்கு தடை கோரிய வழக்கில் நோட்டீஸ்
'இந்தியன் - 2' திரைப்படத்திற்கு தடை கோரிய வழக்கில் நோட்டீஸ்
ADDED : ஜூன் 28, 2024 10:25 PM
மதுரை:இந்தியன் - 2 திரைப்படத்திற்கு தடை கோரிய வழக்கில் நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை நான்காவது கூடுதல் மாவட்ட முன்சீப் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரை மஞ்சா வர்மக்கலை தற்காப்பு கலை மற்றும் ஆராய்ச்சி அகாடமியின் ராஜேந்திரன் தாக்கல் செய்த மனு:
நடிகர் கமல் நடிப்பில், இந்தியன் முதல் பாகம் படத்தில் வர்மக்கலை காட்சிகள் இடம் பெற்றன. படப்பிடிப்பின் போது கமல், இயக்குனர் ஷங்கருக்கு வர்மக்கலை பயிற்சி அளித்தேன். அதற்காக நன்றி தெரிவித்து, படத்தில் என் பெயர் வெளியிடப்பட்டது.
தற்போது, இந்தியன் - 2 படம் வெளியாக உள்ளது. அதில், வர்மக்கலை முத்திரை இடம் பெற்றுள்ளது. அது, எங்களுக்கு சொந்தமானது. முத்திரையை பயன்படுத்த எங்களிடம் அனுமதி பெறவில்லை.
நன்றி தெரிவித்து படத்தில் என் பெயர் இடம் பெற வேண்டும். படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
நடிகர் கமல், இயக்குனர் சங்கர், லைக்கா தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த சுபாஷ்கரனுக்கு நோட்டீஸ் அனுப்ப, நீதிபதி செல்வமகேஸ்வரி உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 9க்கு ஒத்திவைத்தார்.

