கடற்கரையை ஆக்கிரமித்து வீடுகள்; மத்திய, மாநில அரசுகளுக்கு 'நோட்டீஸ்'
கடற்கரையை ஆக்கிரமித்து வீடுகள்; மத்திய, மாநில அரசுகளுக்கு 'நோட்டீஸ்'
UPDATED : ஜூலை 13, 2024 07:45 AM
ADDED : ஜூலை 13, 2024 12:40 AM

சென்னை, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையை ஒட்டிய பகுதிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக வீடுகள் கட்டப்பட்டு வருவது குறித்து விளக்கம் அளிக்குமாறு, மத்திய, மாநில சுற்றுச்சூழல் துறைகள், சி.எம்.டி.ஏ.,வுக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.
சென்னை, பெசன்ட் நகர் கலாஷேத்ரா காலனியில் உள்ள அறுபடைவீடு முருகன் கோவில் அருகே, கடற்கரையை ஒட்டிய பகுதிகளை ஆக்கிரமித்து, சட்டவிரோதமாக வீடுகள் கட்டப்பட்டு வருவதாக, கடந்த ஜூன் 14ல் நாளிதழ்களில் செய்தி வெளியானது.
அதன் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவத்சவா, நீதிபதி அருண்குமார் தியாகி, நிபுணர் குழு உறுப்பினர் செந்தில் வேல் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
சென்னையில் 100 கோடி ரூபாயில், கடற்கரை மறு சீரமைப்புத் திட்டத்தை செயல்படுத்த, தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் சி.எம்.டி.ஏ., அனுமதி கோரியுள்ளது.
இந்நிலையில் தான், பெசன்ட் நகர் கடற்கரை ஆக்கிரமிக்கப்பட்டு, வீடுகள் கட்டுவது தெரிய வந்துள்ளது. அங்கீகரிக்கப்படாத இரண்டு சாலைகளும், கடற்கரையில் அமைக்கப்பட்டு உள்ளன.இது, கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் விதிகளுக்கு எதிரானது. இதனால், மண் அரிப்பு ஏற்பட்டு மழைக்காலத்தில் பாதிப்பு ஏற்படலாம்.
சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு, ஆமைகள் இனப்பெருக்கத்திற்கு ஆபத்து ஏற்படும். எனவே, இந்த வழக்கை தீர்ப்பாயம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய, மாநில சுற்றுச்சூழல், காலநிலை மாற்ற அமைச்சகங்கள், சி.எம்.டி,ஏ., ஆகியவை அறிக்கை தாக்கல் செய்ய 'நோட்டீஸ்' அனுப்பப்படுகிறது.
இந்த விவகாரம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வோடு தொடர்புடையது என்பதால், இந்த வழக்கு சென்னையில் உள்ள தென் மண்டல அமர்வுக்கு மாற்றப்படுகிறது. வழக்கின் அடுத்த விசாரணை, வரும் செப்., 11ல் தென் மண்டல அமர்வில் நடக்கும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

