ADDED : மார் 15, 2025 12:42 AM
சென்னை:திருச்சியில் மாற்றுத்திறனாளி மாணவி மர்மமான முறையில் இறந்த விவகாரத்தில், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனருக்கு, மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில கமிஷனர் சுதன் உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனருக்கு, அவர் அனுப்பியுள்ள நோட்டீஸ்:
திருச்சியில் உள்ள அரசு மாற்றுத்திறனாளிகள் பெண்கள் மேல்நிலை பள்ளியில். பிளஸ் 2 படித்தவர் பார்வை மாற்றுத்திறனாளி மாணவி ராஜேஸ்வரி; இம்மாதம், 9ம் தேதி, மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து, திருச்சி மாநகர போலீசார் வழக்கு பதிவு செய்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனரா?
விசாரணையின் தற்போதைய நிலை என்ன, இச்சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டிருந்தால், அதன் முடிவுகள் என்ன என்பது உட்பட, இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, வரும், 20ம் தேதிக்குள், மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில கமிஷனில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.