சுயசான்று அடிப்படையில் கட்டட அனுமதி சதுர அடிக்கு ரூ.53 கட்டணம் அறிவிப்பு
சுயசான்று அடிப்படையில் கட்டட அனுமதி சதுர அடிக்கு ரூ.53 கட்டணம் அறிவிப்பு
ADDED : ஜூன் 20, 2024 10:37 PM
சென்னை:சுயசான்று அடிப்படையில் கட்டுமான திட்ட அனுமதி வழங்குவதற்கான கட்டணங்கள், விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பொது கட்டட விதிகள் அடிப்படையில், 10,000 சதுரடி வரையிலான கட்டடங்களுக்கு, உள்ளாட்சி அமைப்புகள் ஒப்புதல் வழங்குகின்றன. இவற்றில், குறைந்த எண்ணிக்கையிலான வீடுகள் கட்டும் திட்டங்களுக்கு ஒப்புதல் பெற, பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால், வங்கியில் கடன் வாங்கி வீடு கட்டுவோர் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. வெளி மாநிலங்களில் உள்ளது போன்று, சுயசான்று அடிப்படையில் கட்டட அனுமதி வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த, பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.
எனவே, 2024 - 25ம் ஆண்டு பட்ஜெட்டில், சுயசான்று அடிப்படையில், 3,500 சதுர அடி வரையிலான கட்டடங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.
இது குறித்து, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை சார்பில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுப்பப்பட்டுஉள்ள சுற்றறிக்கை:
சுயசான்று அடிப்படையில் கட்டட அனுமதி வழங்குவதற்கான விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. ஒற்றை சாளர முறை இணையதளத்தில் சுயசான்று அடிப்படையில், கட்டட அனுமதி பெறுவதற்கான புதிய வசதி இணைக்கப்பட உள்ளது.
இதன்படி, ஒரு நபர், 2,500 சதுர அடி நிலத்தில், 3,500 சதுர அடி பரப்பளவுக்கு வீடு கட்டுவதற்கான வரைபடம் உள்ளிட்ட ஆவணங்களை, சுயசான்று அடிப்படையில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்காக, சதுர அடிக்கு, 53 ரூபாய் கட்டணத்தையும் ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்; ஒப்புகை சீட்டு உடனடியாக கிடைத்து விடும்.
இதை ஆதாரமாக வைத்து, விண்ணப்பதாரர்கள் வீடு கட்டும் பணியை துவக்கலாம். இந்த கட்டடங்களுக்கு பணி நிறைவு சான்றிதழ் பெற வேண்டாம் என்பது, மக்களுக்கு கூடுதல் வசதி.
இதன் அடிப்படையில், மன்ற கூட்டத்தில் உரிய தீர்மானங்கள் நிறைவேற்றி, புதிய நடைமுறையை அமல்படுத்த, உள்ளாட்சி அமைப்புகள் அறிவுறுத்தப் பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

