ADDED : ஜூலை 24, 2024 12:34 AM
சென்னை:'சார் - -பதிவாளர் அலுவலக அறிவிப்பு பலகையில், உரிமம் பெற்ற ஆவண எழுத்தர்களின் விபரங்களை வெளியிட வேண்டும்' என, பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், 582 சார்- - பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களில், 4,861 ஆவண எழுத்தர்கள் உரிமம் பெற்று செயல்படுகின்றனர்.
சொத்து விற்பனை உள்ளிட்ட பல்வேறு பரிமாற்றங்களுக்கான ஆவணங்களை, இவர்கள் தயாரித்து கொடுக்கின்றனர். இதற்கு கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், பல இடங்களில் உரிமம் இல்லாத ஆவண எழுத்தர்கள் அத்துமீறி செயல்படுவதாகவும், இவர்களில் சிலர் தரகர்களாக செயல்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பிறப்பித்துள்ள உத்தரவு:
ஒவ்வொரு சார்- - பதிவாளர் அலுவலகத்திலும், ஆவண எழுத்தர்களின் பட்டியல் அறிவிப்பு பலகையில் இடம்பெற வேண்டும்.
ஆவண எழுத்தர் பெயர், உரிமம் எண், மொபைல் போன் எண் போன்ற விபரங்கள் இருக்க வேண்டும்.
இதேபோன்று, பதிவுக்கு தாக்கலாகும் பத்திரத்தில், அதை தயாரித்த ஆவண எழுத்தர் குறித்த விபரங்கள் இணைக்கப்பட்டு உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
போலி நபர்கள் யாராவது பத்திரங்களை தாக்கல் செய்தால், அவர்கள் மீது சார் -- பதிவாளர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை மாவட்ட பதிவாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

