நம்பர் 1 ஆனது 'கெட் அவுட் ஸ்டாலின்' * 'எக்ஸ் டிரெண்டிங்கில்' முதலிடம்
நம்பர் 1 ஆனது 'கெட் அவுட் ஸ்டாலின்' * 'எக்ஸ் டிரெண்டிங்கில்' முதலிடம்
ADDED : பிப் 21, 2025 08:59 PM
சென்னை:'எக்ஸ்' தளத்தில், தி.மு.க.,வின், 'கெட் அவுட் மோடி'க்கு போட்டியாக, தமிழக பா.ஜ., முன்னெடுத்த, 'கெட் அவுட் ஸ்டாலின்' ஹேஷ்டேக், 10 லட்சம் பதிவுகளை தாண்டி, டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்தது.
'தேசிய கல்வி கொள்கையை ஏற்றால் தான், மாநில கல்வி திட்டங்களுக்கு நிதி வழங்கப்படும்' என, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார்.
இதை கண்டித்து நடந்த போராட்டத்தில், துணை முதல்வர் உதயநிதி பேசும்போது, 'பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும்போது, 'கோ பேக் மோடி' என, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த முறை மோடி வந்தால், 'கெட் அவுட் மோடி' என, தமிழக மக்கள் துறத்துவர்' என்றார்.
இதை தொடர்ந்து, தி.மு.க.,வினர், 'எக்ஸ்' தளத்தில், 'கெட் அவுட் மோடி' என்று, 'ஹேஷ்டேக்' பதிவிட்டனர். இது, பா.ஜ.,வினரிடம் கோபத்தை ஏற்படுத்தியது.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 'நீங்கள் 'கெட் அவுட் மோடி' என பதிவிடுங்கள்; நாளை காலை நான், 6:00 மணிக்கு, என் சமூக வலைதளத்தில், 'கெட் அவுட் ஸ்டாலின்' என, பதிவிட போகிறேன். மக்கள் எதை வரவேற்கின்றனர் என பார்ப்போம்' என நேற்று முன் தினம் கூறியிருந்தார். அதன்படி, நேற்று காலை, 6:00 மணிக்கு, 'கெட் அவுட் ஸ்டாலின்' என, பதிவிட்டார் அண்ணமாலை.
அவரை தொடர்ந்து, பா.ஜ.,வினர், 'கெட் அவுட் ஸ்டாலின்' என, பதிவிட்டபடி இருந்தனர். இதனால் இந்த பதிவு, காலையில் இருந்து பிற்பகல் வரை, 'எக்ஸ்' டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்தது. இதற்கிடையில் பிற்பகலில், நடிகர் விஜயின் த.வெ.க.,வினர், 'டி.வி.கே., பார் வின்' என்ற ஹேஷ் டேக்கை டிரெண்டிங் செய்தனர். இதனால் தி.மு.க.,வினர் சற்று ஆறுதல் அடைந்தனர்.