ஐஸ் ஆப்பிள் என்ற பெயரில் நுங்கு ஆன்லைனில் அசத்தல் விற்பனை
ஐஸ் ஆப்பிள் என்ற பெயரில் நுங்கு ஆன்லைனில் அசத்தல் விற்பனை
ADDED : மே 15, 2024 12:05 AM

சென்னை:'ஐஸ் ஆப்பிள்' என்ற பெயரில், ஆன்லைன் வாயிலாகவும், சூப்பர் மார்க்கெட்டுகளிலும் நுங்கு விற்பனை களைகட்டி வருகிறது.
பனை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இதையடுத்து, பனை பொருட்கள் விற்பனையில், சூப்பர் மார்க்கெட்டுகளும், ஆன்லைன் நிறுவனங்களும் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளன.
தற்போது, மாநிலம் முழுதும் பனை நுங்கு சீசன் களைகட்டி வருகிறது. கோடை வெப்பத்தில் இருந்து தங்களை பாதுகாக்க, அதை பலரும் சுவைக்க துவங்கிஉள்ளனர்.
தேவை அதிகரித்துள்ள நிலையில், தென் மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் சிலர், பனங்காய்களை எடுத்து வந்து சாலையோரங்களில், நுங்கு சர்பத் தயாரித்து விற்று வருகின்றனர். இவர்களிடம் ஒரு நுங்கு, 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
சென்னையில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில், மூன்று நுங்குகள் கொண்ட, ஒரு பிரிவு, 15 முதல் 20 ரூபாய்க்கும்; ஆன்லைன் நிறுவனங்கள் வாயிலாக, 60 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன. ஐஸ் ஆப்பிள் என்ற பெயரில், பனை நுங்கு விற்பனை களை கட்டி வருகிறது.
ஆன்லைன் வாயிலாக பதிவு செய்வோருக்கு நுங்கு முழுதாகவும், அதன் சுளை பிளாஸ்டிக் டப்பாக்கள், விரைவில் கெடாத வகையில் பேப்பர் பாக்கெட்டுகளில் அடைத்து அனுப்பி வைக்கப்படுகின்றன.
விபரம் அறிந்து, நகர்ப்புறங்களில் வசிப்போர் பலரும், இவற்றை வாங்கி சுவைத்து வருகின்றனர்.

