புதிய அரசு மருத்துவமனை துவங்கும் போது நிரந்தர பணியிடங்களை உருவாக்க வேண்டும் செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் வலியுறுத்தல்
புதிய அரசு மருத்துவமனை துவங்கும் போது நிரந்தர பணியிடங்களை உருவாக்க வேண்டும் செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் வலியுறுத்தல்
ADDED : மார் 03, 2025 06:21 AM
விருதுநகர் : ''புதிய அரசு மருத்துவமனைகள் துவங்கும் போது, நிரந்தர செவிலியர்கள் பணியிடங்களையும் உருவாக்க வேண்டும்,'' என, விருதுநகரில் தமிழ்நாடு எம்.ஆர்.பி., செவிலியர்கள் மேம்பாட்டு சங்க மாநில பொதுச்செயலர் சுபின் வலியுறுத்தினார்.
அவர் மேலும் கூறியதாவது:
சென்னை கொளத்துாரில் முதல்வர் ஸ்டாலின், பிப்., 27ல் பெரியார் அரசு மருத்துவமனையை திறந்து வைத்தார். இங்கு நிரந்தர செவிலியர் பணியிடங்கள் உருவாக்கப்படாமல், 20 பேரை மாற்றுப்பணியிலும், 156 பேரை ஒப்பந்தத்திலும் செவிலியர்களாக பணி அமர்த்தியுள்ளனர்.
மேலும் கருணாநிதி பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், நிரந்தர செவிலியர் பணியிடங்கள் இல்லாததால், மருத்துவ சேவை நிரந்தர தன்மையற்றதாக மாறும் அபாயம் உள்ளது.
தேசிய மருத்துவ ஆணையத்தின் பரிந்துரை, இந்திய பொது சுகாதார தர நிர்ணயங்களின் அடிப்படையில், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப செவிலியர் பணியிடங்கள் இல்லாமல், தமிழகத்தில் 13,000 பேர் தொகுப்பூதியத்தில் பணிபுரிகின்றனர்.
தேர்தல் வாக்குறுதியில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியர்கள் நிரந்தரம் செய்யப்படுவர் என்று தெரிவித்தனர்.
புதிதாக அரசு மருத்துவமனைகள் துவங்கும் போது, அங்கு நிரந்தர பணியிடங்களை உருவாக்கி தொகுப்பூதியத்தில், எட்டு ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரியும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
மருத்துவம், மக்கள் நல்வாழ்வு துறையால் பிப்., 24ல் வெளியிடப்பட்ட அரசாணை 45ஐ மறுபரிசீலனை செய்து, செவிலியர்களுக்கு வழங்கிய தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற, கடைசி பட்ஜெட் அறிவிப்பில் தொகுப்பூதிய முறையை கைவிட்டு விட்டு, செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.