யானையின் பிரேத பரிசோதனைக்காக மனைவி நகையை அடகு வைத்த அதிகாரி
யானையின் பிரேத பரிசோதனைக்காக மனைவி நகையை அடகு வைத்த அதிகாரி
UPDATED : செப் 09, 2024 06:19 AM
ADDED : செப் 08, 2024 11:35 PM
மூணாறு: கேரள மாநிலம் சின்னக்காவல் பகுதியில் இறந்த முறிவாலன் கொம்பன் ஆண் யானை பிரேத பரிசோதனைக்காக வன அதிகாரி மனைவி நகைகளை அடகு வைத்து செலவை சமாளித்துள்ளார்.
இம்மாநிலத்தில் போக்குவரத்து, வனம், போலீஸ் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகள் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன. இதனால் மாதம் தோறும் முறையாக சம்பளம் வழங்க இயலாத நிலையுள்ளது. அரசு மீது கடும் அதிருப்தி நிலவுகிறது.
மூணாறு வனப்பிரிவினருக்கு முறையாக நிதி கிடைக்காததால் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பிய தொகையை கூட ஆறு மாதங்களாக பெட்ரோல் பங்க்குகளுக்கு வழங்க முடியவில்லை. வாகன பராமரிப்பு பணிகளை செய்யவும் முடியாமல் துறை அதிகாரிகள் தவித்து வருகின்றனர். வனத்துறை வாகனங்களுக்கு எரிபொருட்கள் வழங்குவதை நிறுத்த பங்க் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
நிதி நெருக்கடியை சமாளிக்க யானை தடுப்பு பிரிவினர் உள்ளிட்ட ற்காலிக ஊழியர்கள் 200 பேருக்கு மாதத்தில் 15 முதல் 20 நாட்கள் மட்டுமே பணி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் 22 முதல் 26 நாட்கள் வரை பணி கொடுக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது.
இந்நிலையில் சின்னக்கானல் பகுதியில் காட்டு யானைகள் மோதியதில் முறிவாலன் கொம்பன் ஆண் காட்டு யானை ஆக., 31 நள்ளிரவு இறந்தது.
அதன் உடலை பிரேத பரிசோதனை நடத்த நிதி இல்லை. இதனால் மூணாறு வனப்பிரிவைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் தன் மனைவியின் நகைகளை ரூ.80 ஆயிரத்துக்கு அடகு வைத்து அதற்கான செலவை சமாளித்துள்ளார்.