காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க டில்லி செல்ல அதிகாரிகளுக்கு தடை..
காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க டில்லி செல்ல அதிகாரிகளுக்கு தடை..
ADDED : மே 16, 2024 04:37 AM

சென்னை: காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தமிழக அதிகாரிகள் டில்லி செல்ல தடை விதிக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் முறைப்படி நீர் வழங்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தேவையான பரிந்துரைகளை, காவிரி நீர் முறைப்படுத்தும் குழு வழங்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்தில், தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில நீர்வளத்துறை செயலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவில், காவிரி பாசன பகுதிகளின் நீர்வளத்துறை தலைமை பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
இரண்டு அமைப்புகளுக்கும் சட்ட ஆலோசனைகள் வழங்க, ஒவ்வொரு மாநிலத்திற்கும் பிரதிநிதிகள் உள்ளனர். காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தை மாதம்தோறும் நடத்த வேண்டும். அதன்படி, கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில், பங்கேற்பதற்காக தமிழக அதிகாரிகள், விமானத்தில் டில்லி செல்வது வழக்கம். ஆனால், இனி டில்லி செல்லாமல், 'ஆன்லைன்' வாயிலாக பங்கேற்க வேண்டும் என, நீர்வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனா உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பரிந்துரைப்படி, அரசின் செலவை குறைப்பதற்காக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
காவிரி மேலாண்மை ஆணையத்தை விட, காவிரி நீர் முறைப்படுத்தும் கூட்டத்தில் தான் காரசார விவாதம் நடத்தப்படுகிறது. நீர்வளத்துறை செயலர்கள் பெரிதாக விவாதிப்பது கிடையாது. எனவே, கூட்டத்தில் நேரடியாக பங்கேற்றால் தான் அங்கு என்ன நடக்கிறது என்பது தெரியும். ஆனால், இன்று முதல் நடக்கவுள்ள அனைத்து கூட்டத்திலும், ஆன்லைன் வாயிலாக பங்கேற்க வாய்மொழியாக உத்தரவிடப்பட்டு உள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையத்தில், தமிழக பிரதிநிதிகளுக்கு தெரியாமலே, மேகதாது அணை கட்டுமான பிரச்னையை, மத்திய நீர்வளத்துறை கவனத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. நீர்வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனா பங்கேற்ற நிலையில், அவர் ஏமாற்றப்பட்டதாக, அமைச்சர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அவ்வாறு இருக்கும் போது, கவனமுடன் இருக்க வேண்டிய பிரச்னையில், ஆன்லைன் வாயிலாக பங்கேற்க சொல்வது பொருத்தமாக இல்லை. இதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.