கடல் காற்றாலை மின்சாரம்: யூனிட்டுக்கு ரூ.4 தான் தர முடியும்; மின் வாரியம் சொல்கிறது
கடல் காற்றாலை மின்சாரம்: யூனிட்டுக்கு ரூ.4 தான் தர முடியும்; மின் வாரியம் சொல்கிறது
ADDED : மே 07, 2024 05:07 AM
சென்னை: 'தமிழக கடலில் அமைக்கப்படும் காற்றாலை மின் நிலையங்களில் இருந்து, 2,000 மெகாவாட் மின்சாரத்தை ஏற்கனவே தீர்மானித்தபடி, யூனிட், 4 ரூபாய்க்கு வழங்க வேண்டும்; உற்பத்தி மற்றும் வழித்தட செலவை சேர்த்து, 8.20 ரூபாய் என நிர்ணயிக்கக் கூடாது' என்று, மத்திய மின் துறையை, தமிழக மின் வாரியம் வலியுறுத்திஉள்ளது.
தமிழகம் மற்றும் குஜராத் மாநிலங்களில் உள்ள கடலில், 30,000 மெகாவாட் திறனில் காற்றாலை மின் நிலையங்கள் அமைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மின் வழித்தடங்கள்
முதல் கட்டமாக, தமிழகத்தில், கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்கள் இடையே உள்ள கடலில், 5,000 மெகாவாட் திறனில் காற்றாலை மின்நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஆய்வு உள்ளிட்ட பணிகள் துவங்கியுள்ளன.
கடலில் அமைக்கப்படும் காற்றாலை மின்சாரத்தை எடுத்து வந்து, பல பகுதிகளுக்கு வினியோகிக்க கடலுக்கு அடியிலும், நிலத்திலும் மின் வழித்தடங்கள் அமைக்கப்பட உள்ளன.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழக கடலில் அமைக்கப்படும் காற்றாலைகளில் இருந்து, 2,000 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்திற்கு மட்டுமே வழங்குமாறு மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டது. அதற்கு, யூனிட் மின்சார விலை, 4 ரூபாய் என, தீர்மானிக்கப்பட்டது.
முதல் கட்டமாக, 1,000 மெகாவாட் கடல் காற்றாலை மின்சாரத்தை வினியோகிக்க, 11,845 கோடி ரூபாய் செலவில், திருநெல்வேலி ஆவரை குளத்தில், 430/230 கிலோ வோல்ட் திறனில் துணைமின் நிலையமும்; மின் வழித்தடங்களும் அமைக்கப்பட உள்ளன.
இதனால், யூனிட் வழித்தட செலவு, 4.20 ரூபாய் இருக்கும் என, கணக்கிடப்பட்டு உள்ளது. அதனுடன், மின்சார விலையான, 4 ரூபாயும் சேர்ந்தால், ஒரு யூனிட் விலை, 8.20 ரூபாயாக இருக்கும். மேலும், வழித்தட செலவு ஆண்டுதோறும் அதிகரிக்கப்படும்.
வலியுறுத்தல்
எனவே, தமிழகத்திற்கு, 2,000 மெகாவாட்டை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டபடி யூனிட், 4 ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும் என்று, மத்திய மின் துறையின் கீழ் இயங்கும் தென் மாநில மின்சார குழு செயலருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
கூடுதலாக ஏற்படும் செலவுகளை மத்திய அரசு ஏற்க வேண்டும். மேலும், 2,000 மெகா வாட் மின்சாரம் ஒதுக்கீடு செய்தாலும், காற்றாலைகளில் இருந்து ஒரே சீராக மின்சாரம் கிடைக்காது.
எனவே, 1,000 மெகா வாட் திறனில் பேட்டரியில் சேமிக்கும் தொழில்நுட்பத்துடன் கூடிய காற்றாலை மின் நிலையம் அமைக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.