ADDED : மே 17, 2024 01:57 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே புக்கத்துறையில், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது, ஆம்னி பஸ் மோதிய விபத்தில், பேருந்தில் பயணித்த நான்கு பேர் பரிதாபமாக இறந்தனர்.
திருச்சியிலிருந்து நேற்று முன்தினம் இரவு, 30க்கும் மேற்பட்ட பயணியருடன் புறப்பட்ட, ஆர்.கே.டி., நிறுவன ஆம்னி பஸ், சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த புக்கத்துறை அருகே வந்தபோது, ஆம்னி பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது.
ஆம்னி பஸ்சுக்கு பின்னால், முசிறியில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பஸ்சும் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்துக்கு காரணமான லாரி, விழுப்புரத்தில் கிரானைட் கற்களை ஏற்றி, சென்னை பூந்தமல்லி நோக்கி வந்து கொண்டிருந்தது.
ஓய்வுக்காக எச்சரிக்கை விளக்கு ஒளிரவிட்டபடி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. எதிர்பாராமல் நடந்த இந்த விபத்தில், ஆம்னி பஸ்சில் பயணித்த மேல்மருவத்துார் அடுத்த அகிலி கிராமத்தை சேர்ந்த, திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் ராஜேஷ், 30, சென்னை பட்ரோடு பகுதியை சேர்ந்த பிரவீன், 24, கொடுங்கையூர் தனலட்சுமி, 56, மற்றும் திருச்சி ஜாய்எஸ்தர், 29, ஆகியோர், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.
அரசு பஸ் டிரைவர் கனகராஜுக்கு, 58, காலில் சிறிய காயங்கள் ஏற்பட்டன. ஆம்னி பஸ் டிரைவர் சிறிய காயங்களுடன் அங்கிருந்து தப்பினார். தகவலின்படி சம்பவ இடத்திற்கு சென்ற படாளம் போலீசார், விபத்தில் பலியானோரின் உடல்களையும், காயமடைந்த பயணியர், 20க்கும் மேற்பட்டோரையும் செங்கல்பட்டு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இந்த விபத்து காரணமாக, நேற்று அதிகாலையில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக, சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த விபத்தில் இறந்த நான்கு பேரின் குடும்பத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு, சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.
விபத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்துக்கு, அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மதுராந்தகம் அருகே நேற்று முன்தினம் நடந்த விபத்தில் தாய், இரு பிள்ளைகள், கார் ஓட்டுனர் என நான்கு பேர் இறந்த சம்பவம் ஓய்வதற்குள், நேற்றும் மதுராந்தகத்தில் நடந்த கோர விபத்தில் நான்கு பேர் இறந்தனர்.

