காலாவதி சுங்கச்சாவடிகளை அகற்ற ஆம்னி பஸ் ஓனர்கள் கோரிக்கை
காலாவதி சுங்கச்சாவடிகளை அகற்ற ஆம்னி பஸ் ஓனர்கள் கோரிக்கை
ADDED : செப் 03, 2024 02:19 AM
சென்னை: 'தமிழகத்தில் காலாவதியான சுங்கச்சாவடிகளை, மத்திய அரசு அகற்ற வேண்டும்' என, அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் 3,000த்துக்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்களுக்கு இதுவரை அரசால் கட்டணம் நிர்ணயம் செய்யப்படவில்லை.
அதனால், வழக்கமான நாட்களில் ஒரு கட்டணமும், பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் அதிக கட்டணமும் நிர்ணயம் செய்து இயக்கப்படுகின்றன.
இதற்கிடையே, தமிழகத்தில் மொத்தமுள்ள 67 சுங்கச்சாவடிகளில், 25ல் கடந்த 1ம் தேதியில் இருந்து, 5 முதல் 7 சதவீதம் வரை கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இதனால், ஆம்னி பஸ்களில் மீண்டும் கட்டணம் உயருமோ எந்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் கூறியதாவது:
டீசல், உதிரி பொருட்கள் விலை உயர்வால், ஆம்னி பஸ் தொழில் வெகுவாக பாதித்துள்ளது. இதற்கிடையே, சுங்கச்சாவடிகளின் கட்டணமும் அடிக்கடி உயர்த்தப்படுகிறது. கடந்த 1ம் தேதி முதல், கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
முன் இருந்த கட்டணத்தை விட, கூடுதலாக 5 முதல் 150 ரூபாய் வரை அதிகம் செலுத்த வேண்டியுள்ளது. கடந்த ஜூன் மாதம் 36 சுங்கச்சாவடிகளில் கட்டணம் ஏற்கனவே உயர்த்தப்பட்டுள்ளது.
எனவே, மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு, காலாவதியான சுங்கச்சாவடிகளை அப்புறப்படுத்த வேண்டும்.
மேலும், தற்போது உயர்த்தப்பட்டுள்ள, 'டோல்கேட்' கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். ஏற்கனவே, ஆம்னி பஸ்களில் பயணியர் வருகை குறைந்து வருவதால், கட்டணத்தை உயர்த்தும் முடிவை எடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.