நகை கடன் வட்டிக்கு கடைசி நாள் இனி எஸ்.எம்.எஸ்., தகவல் வரும்
நகை கடன் வட்டிக்கு கடைசி நாள் இனி எஸ்.எம்.எஸ்., தகவல் வரும்
ADDED : ஜூன் 25, 2024 12:19 AM

சென்னை: நகர கூட்டுறவு வங்கிகளில், நகைக் கடனுக்கு வட்டி செலுத்த வேண்டிய கடைசி நாள் உள்ளிட்ட பல சேவைகளின் தகவல், வாடிக்கையாளரின் மொபைல் போன் எண்ணுக்கு அனுப்பப்பட உள்ளது.
கூட்டுறவு துறையின் கீழ் மாநிலம் முழுதும், 128 நகர கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. அவை, பொது மக்களிடம் இருந்து டிபாசிட் தொகை திரட்டி வீட்டுக் கடன், நகைக்கடன் என, பல்வேறு கடன்களை வழங்குகின்றன.
நகைக்கடனுக்கு ஓராண்டிற்குள் அசல், வட்டி செலுத்தவில்லை எனில், செலுத்தக் கோரி வாடிக்கையாளருக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்படும். வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளரை தொடர்பு கொண்டு செலுத்த சொல்வர். அப்படியும் செலுத்தாதபட்சத்தில், நகைகள் ஏலம் விடப்படும்.
தற்போது, நகர கூட்டுறவு வங்கிகளில், 'கோர் பேங்கிங்' எனப்படும், மைய வங்கியியல் தீர்வு முறையில் கூடுதல் வசதிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இவற்றின் வாயிலாக, டிபாசிட் தொகை முதிர்வு, நகைக் கடனுக்கு அசல் மற்றும் வட்டி செலுத்த வேண்டிய கடைசி நாள் உள்ளிட்ட சேவைகள், வாடிக்கையாளரின் மொபைல் போனுக்கு எஸ்.எம்.எஸ்., வாயிலாக அனுப்பப்பட உள்ளன.
இதுகுறித்து, கூட்டுறவு இணை பதிவாளர் ஒருவர் கூறியதாவது:
ரிசர்வ் வங்கி உத்தரவுப்படி, 10 ஆண்டுகளாக செயல்படாத வங்கி கணக்கு விபரத்தை கண்காணித்து, அதற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில், ரிசர்வ் வங்கி அபராதம் விதிக்கும்.
எனவே, 10 ஆண்டுகளாக செயல்படாத வங்கி கணக்கு விபரத்தை தெரிவிக்கும் மென்பொருள் உருவாக்கம், நகை கடன் உள்ளிட்ட சேவைகள், வாடிக்கையாளருக்கு எஸ்.எம்.எஸ்., வாயிலாக அனுப்பப்பட உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.