
மார்ச் 22, 1977
கேரள மாநிலம், வடகேரள எல்லையில் உள்ள பேரலாசேரியில், 1904, அக்., 1ல் பிறந்தவர் ஏ.கே.கோபாலன். இவர், தெல்லிசேரி எனும் ஊரில் படித்தார். அப்போது ஆசிரியராக வேண்டும் என விரும்பினார்.
இந்திய சுதந்திர போராட்டம், காந்தியின் தலைமையில் வலுப்பெற்ற போது, இவரும் அதில் இணைந்தார். பின் காங்கிரசில் இணைந்து, கதர் இயக்கத்தை முழுநேர அரசியல் செயல்பாடாக மாற்றினார். உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு, சிறை சென்றார்.
கேரளாவின் பையனுாரில் தீண்டாமை ஒழிப்புக்காக ஆலய பிரவேசத்தில் ஈடுபட்டார். 1939ல் இந்திய கம்யூ., கட்சியில் சேர்ந்தார். இந்திய காபி விடுதி தொழிலாளர்களுக்காகவும் போராடினார். சுதந்திரத்துக்கு பின், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதானார்.
இந்திய கம்யூ., சார்பில் எம்.பி.,யானார். பின்னாளில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி உருவாகவும் காரணமானார். தன் சுயசரிதையை, 'நான் என்றும் மக்கள் ஊழியனே' என்ற நுாலாக எழுதிய இவர், 1977ல் தன், 73வது வயதில் இதே நாளில் மறைந்தார்.
இந்திய பார்லிமென்டின் முதல் எதிர்க்கட்சி தலைவர் மறைந்த தினம் இன்று!

