
மார்ச் 24, 1905
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவில், சுப்பிரமணிய அய்யர் - மீனாட்சி தம்பதியின் மகனாக, 1905ல் இதே நாளில் பிறந்தவர் பி.எஸ்.ராமய்யா. ஐந்தாம் வகுப்பு வரை படித்த இவர், குடும்ப வறுமையால் பல ஊர்களில் பல்வேறு வேலைகளை செய்தார்.
காந்தியின் உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு, சிறை சென்றார். சிறையில் முன்னணி போராளிகளுடன் பழகினார். கதராடை விற்பனை, ஓரணா புத்தக விற்பனைகளில் ஈடுபட்டார். இவர் எழுதிய, 'மலரும் மணமும்' சிறுகதை ஆனந்த விகடனில் வெளியானது. 'ஜயபாரதி' இதழில் உதவி ஆசிரியராக சேர்ந்தார். 'மணிக்கொடி' இதழுக்கு விளம்பர பிரதிநிதியாக இருந்ததுடன், ஆசிரியராகவும் மாறினார்.
'மணிக்கொடி காலம்' என்ற இலக்கிய வரலாற்று நுாலை எழுதி சாகித்ய அகாடமி விருது பெற்றார். 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள், மூன்று நாவல்கள், ஆறு நாடகங்களை எழுதினார்.
இவரது, 'பிரசிடென்ட் பஞ்சாட்சரம், போலீஸ்காரன் மகள்' நாடகங்கள் திரைப்படங்களாகின. பரஞ்சோதி, பூலோக ரம்பை, பக்த நாரதர், தேவதாசி கதை உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதிய இவர், 1983, மே 18ல் தன் 78வது வயதில் மறைந்தார். இவரது பிறந்த தினம் இன்று!

