
மார்ச் 26, 1965
கர்நாடக மாநிலம், பெங்களூரில் 1965ல் இதே நாளில் பிறந்தவர் பிரகாஷ் ராய் எனும் பிரகாஷ் ராஜ். இவர் துளு மொழி பேசும் தந்தைக்கும், கன்னட மொழி பேசும் தாய்க்கும் பிறந்ததால், பன்மொழி திறமையுடன் வளர்ந்தார். அங்குள்ள செயின்ட் ஜோசப் பள்ளி, கல்லுாரிகளில் படித்தார்.
பெங்களூரு கலாஷேத்ராவில் மாத சம்பளத்துக்கும், கன்னட தொலைக்காட்சிகளிலும் நடித்தார். சில கன்னட மொழி படங்களிலும் நடித்தார். கே.பாலசந்தர், இவரது குடும்ப பெயரான ராயை தமிழகத்துக்கு ஏற்ப பிரகாஷ் ராஜ் என மாற்றி, டூயட் படத்தில் வில்லனாக அறிமுகப்படுத்தினார்.
அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கில மொழி படங்களில், பல்வேறு பாத்திரங்களில் நடித்தார். மணிரத்னத்தின் இயக்கத்தில் இருவர் படத்திற்காகவும், பிரியதர்ஷனின் இயக்கத்தில் காஞ்சீவரம்' படத்திற்காகவும் தேசிய விருதுகளை பெற்றார்.
புட்டக்கான ஹைவே எனும் கன்னட படத்தை இயக்கி அதற்கும் விருது பெற்றார். வாஞ்சிநாதன், சிவகாசி, கில்லி, மொழி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். 'செல்லம்' என்ற சொல்லை பிரபலமாக்கியவரின் 59வது பிறந்த தினம் இன்று!

