
மார்ச் 29, 1965
கடலுார் மாவட்டம், அடூர் அகரம் எனும் ஊரில் சின்னையா - செங்கேணி அம்மாள் தம்பதியின் மகனாக, 1924, செப்டம்பர் 21ல் பிறந்தவர் விசயரங்கம் எனும் தமிழ் ஒளி.
புதுச்சேரி முத்தியால்பேட்டை பள்ளியிலும், கலவை கல்லுாரியிலும் படித்தார். பாரதியார், பாரதிதாசன் கவிதைகளால் ஈர்க்கப்பட்டார். தான் எழுதும் கவிதைகளை பாரதிதாசனிடம் படித்து காட்டி பாராட்டு பெற்றார். தஞ்சாவூர், கரந்தை தமிழ் கல்லுாரியிலும் படித்தார்.
'திராவிட நாடு, குடியரசு, தாமரை' உள்ளிட்ட இதழ்களில் கவிதைகள் எழுதினார். 'வீராயி, நிலைபெற்ற சிலை, மே தின ரோஜா' உள்ளிட்ட காவியங்களை எழுதினார். தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் உறுப்பினராக பணியாற்றினார்.
அலாவுதீனும் அற்புத விளக்கும் படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார். இவர் எழுதிய, 'சிற்பியின் காதல்' நாடகம், வணங்காமுடி எனும் திரைப்படமானது. பூவண்ணன், விந்தன், ஜெயகாந்தன் உள்ளிட்ட எழுத்தாளர்களால் பாராட்டப்பட்ட இவர், 1965ல், தன் 41வது வயதில், இதே நாளில் மறைந்தார். இவரது நினைவு தினம் இன்று!

