
மார்ச் 31, 1928
நாகப்பட்டினம் மாவட்டம், கோமல் எனும் ஊரில், ராமகிருஷ்ணன் - ருக்மணி தம்பதியின் மகனாக, 1928ல் இதே நாளில் பிறந்தவர் அரங்கண்ணல்.
இவர் அண்ணாமலை பல்கலையில் படித்தார். 'முஸ்லிம்' இதழின் துணை ஆசிரியராக பணியாற்றி பின், 'திராவிட நாடு' இதழில் பணியாற்றினார். 'அறப்போர்' என்ற இதழை துவங்கினார். சிறுகதை, புதினங்களை எழுதினார்.
அவை, செந்தாமரை, பொன்னு விளையும் பூமி, பச்சை விளக்கு, அனுபவி ராஜா அனுபவி உள்ளிட்ட திரைப்படங்களாக மாறின. அவற்றுக்கும் வசனம் எழுதினார். அண்ணாதுரையின் கதை, 'தாய் மகளுக்கு கட்டிய தாலி' என்ற திரைப்படமானது. அதற்கும் வசனம் எழுதி, அவருடன் நெருக்கமானார்.
தமிழ், மலையாளம், கன்னட மொழி திரைப்படங்களையும் தயாரித்தார். அண்ணாதுரை தி.மு.க.,வை துவக்கிய போது, இவரும் இணைந்தார். 1962, 1967, 1971ம் ஆண்டுகளில் எம்.எல்.ஏ.,வானார். குடிசை மாற்று வாரிய தலைவராகவும் செயல்பட்டார்.
இடையில் அ.தி.மு.க., மக்கள் தி.மு.க., கட்சிகளுக்கு சென்று மீண்டும் தி.மு.க.,விலேயே சேர்ந்தார். இவரது நுால்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. 'கலைமாமணி' விருது பெற்ற இவர், 1999 ஏப்., 29ல் தன் 71வது வயதில் மறைந்தார். ராம.அரங்கண்ணல் பிறந்த தினம் இன்று!

