
ஏப்ரல் 2, 2012
மயிலாடுதுறையில், 1933ல் பிறந்தவர் எம்.சரோஜா. எம்.ஜி.ஆர்., படங்களில் அம்மாவாகவும், அக்காவாகவும் நடித்த எம்.லெட்சுமி பிரபாவின் தங்கையான இவர், நாடகங்களில் நடித்தார். நடிப்புக்காக வாள் சண்டை, நடனம் உள்ளிட்ட கலைகளை கற்ற இவரின் 14வது வயதில், சர்வாதிகாரி திரைப்படத்தில், எம்.ஜி.ஆரின் முறைப்பெண்ணாக அறிமுகப்படுத்தினார் கே.சுப்பிரமணியம்.
தொடர்ந்து, மருதநாட்டு வீரன், அரசிளங்குமரி, தில்லானா மோகனாம்பாள், திருடாதே, பார்த்தால் பசிதீரும் என தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்களிலும் நடித்தார்.
தங்கவேலுவுடன் 50க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார். இவர்கள் நடித்த, கல்யாணப்பரிசு படத்தின் நுாறாவது நாளில், மதுரை முருகன் கோவிலில் திருமணம் செய்தனர். மாடர்ன் தியேட்டர்சில், ஒரே நேரத்தில் 10 படங்களில் நடிக்க ஒப்பந்தமான ஒரே நடிகை. 'கலைமாமணி' உள்ளிட்ட விருதுகளை பெற்ற இவர் தன் 79வது வயதில், 2012ல் இதே நாளில் மறைந்தார்.
இவரது நினைவு தினம் இன்று!

