
ஏப்ரல் 4, 1911
சென்னை, பூந்தமல்லிக்கு அருகில் உள்ள காரம்பாக்கத்தில், கிருஷ்ணய்யர் - வேங்கடசுப்பம்மாள் தம்பதியின் மகனாக, 1911ல் இதே நாளில் பிறந்தவர் கா.ம.வேங்கடராமையா.
இவர், சென்னை லயோலா கல்லுாரியில் பி.ஏ., பொருளாதாரம் படித்து, செங்கல்பட்டில் ஆசிரியராக பணியாற்றினார். இவரின் தாய்மொழி தெலுங்காக இருந்தும், தமிழில் பி.ஓ.எல்., ஆங்கிலத்தில் முதுகலை படிப்புகளை முடித்து, திருப்பனந்தாள் சுவாமிநாத சுவாமிகள் செந்தமிழ் கல்லுாரியில் முதல்வராக பணியாற்றினார்.
தஞ்சை தமிழ்ப் பல்கலையின் அரிய கையெழுத்து சுவடி புலத்தின் தலைவர், 'குமரகுருபரர்' இதழின் நிர்வாகியாகவும் இருந்தார். இலக்கணம், இலக்கியம், கல்வெட்டு, வரலாறு, சமஸ்கிருதம் உள்ளிட்டவற்றில் ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார்.
'தஞ்சை மராட்டிய மன்னர்கள் வரலாறு, கந்தபுராணம்' உள்ளிட்ட நுால்களை பதிப்பித்த இவர், தன் 83வது வயதில், 1994, ஜனவரி 31ல் மறைந்தார்.
வைணவராக பிறந்து சைவத்தை ஆராய்ந்த, 'செந்தமிழ் கலாநிதி' பிறந்த தினம் இன்று!

