
ஏப்ரல் 7, 1963
திருச்சியின் உறையூரில், சிவஞானம் - ராஜேஸ்வரி தம்பதியின் மகனாக, 1963ல் இதே நாளில் பிறந்தவர் சிவ.பாலசுப்பிரமணி எனும் ஒரிசா பாலு.
தமிழகத்திலும், புதுச்சேரியிலும் இன்ஜினியரிங் படித்த இவர், ஒரிசாவில் மாற்று எரிபொருள் துறையில், கனிமவள கண்டு பிடிப்புக்கான ஆஸ்திரேலிய நிறுவனத்தில் பணிபுரிந்தார். பழந்தமிழர்களின் கடல்சார் அறிவு குறித்து ஆய்வு செய்தார். ஒரிசாவின் புவனேஸ்வர் தமிழ் சங்கத்தை துவக்கி, அங்குள்ள தமிழர்களை ஒருங்கிணைத்து, மற்ற நாட்டு தமிழர்களுடன் பழகும் வாய்ப்பை ஏற்படுத்தினார்.
கலிங்கத்துடன் பழந்தமிழர்கள் கொண்டிருந்த தொடர்பை ஆராய்ந்து வெளிப்படுத்தினார். கடற்கரைக்கு இனப்பெருக்க காலத்தில் வரும் ஆமைகளுக்கும், நீரோட்டத்துக்கும் உள்ள தொடர்பையும் பழந்தமிழர்களின் கடல்வழி பயணத்துக்கும் உள்ள தொடர்புகளையும் ஆய்வு வாயிலாக விளக்கினார்.
சிந்து, கிரேக்கம், சீனா, எகிப்து உள்ளிட்ட நாட்டு நாகரிகங்களில் தமிழர்களின் பங்களிப்பை விளக்கினார். 'கடலார்' இதழின் ஆலோசகராகவும், 'ஒருங்கிணைந்த பண்பாட்டு ஆய்வு நடுவ'த்தின் நிறுவனராகவும் இருந்த இவர், தன் 60வது வயதில், 2023, அக்டோபர் 6ல் காலமானார்.
கடலாய்வு நிபுணர் பிறந்த தினம் இன்று!

