
ஏப்ரல் 8, 1964
திருநெல்வேலி மாவட்டம், காருகுறிச்சியில், பலவேசம் பிள்ளை --- செல்லம்மாள் தம்பதியின் மகனாக, 1921ல் பிறந்தவர் அருணாசலம். இவர், சுத்தமல்லி சுப்பய்யா கம்பர், களக்காடு சுப்பய்யா பாகவதர் ஆகியோரிடம் நாதஸ்வர வாசிப்பின் அடிப்படையை கற்றார். திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையிடம் சீடராக சேர்ந்து, இசையின் ஆழ, அகலங்களை கற்றார்.
இவரின் திறமையை, தம்பிக்கோட்டை பாலசுப்பிரமணிய தேவர் உள்ளிட்டோர் ஆதரித்தனர். சென்னை தமிழிசை சங்கத்தில் இடம்பெற்ற இவரின் வாசிப்பை, வானொலி நிலையம் நள்ளிரவு வரை ஒலிபரப்பியது. ராக ஆலாபனைகள், அரிய கீர்த்தனைகளை விரிவாக வாசித்தார். 'கனகாங்கி, ரத்னாங்கி, சந்திரஜோதி, வகுளாபரணம், நாமநாராயணி' உள்ளிட்ட அரிய ராகங்களை வாசிப்பதில் வல்லவர்.
இவருக்கு, கும்பகோணம் தங்கவேல் பிள்ளை, நாச்சியார்கோவில் ராகவாப்பிள்ளை, வலங்கைமான் சண்முகசுந்தரம் பிள்ளை, வடபாதிமங்கலம் தட்சிணாமூர்த்தி பிள்ளை, பெரும்பள்ளம் வெங்கடேச பிள்ளை, கரந்தை சண்முகம் பிள்ளை, நீடாமங்கலம் சண்முகம் பிள்ளை உள்ளிட்டோர் தவில் வாசித்தனர். இவர் தன், 43வது வயதில், 1964ல், இதே நாளில் மறைந்தார்.
கொஞ்சும் சலங்கை படத்தின், 'சிங்கார வேலனே தேவா' பாடலுக்கு, நாதஸ்வரம் வாசித்து, ரசிகர் மனங்களை கொள்ளையடித்தவரின் நினைவு தினம் இன்று!

