
ஏப்ரல் 10, 1941
பிரிவினைக்கு முந்தைய இந்தியாவின் லாகூரில், பட்டய கணக்காளராக இருந்த வைத்தியநாத சங்கர் அய்யர் - பாக்கியலட்சுமி தம்பதிக்கு மகனாக, 1941ல் இதே நாளில் பிறந்தவர் மணிசங்கர் அய்யர்.
சுதந்திரத்துக்கு பின் இந்தியா வந்த இவர், 12வது வயதில் தந்தையை இழந்தார். டில்லியின் வெல்ஹாம் பள்ளி, டூன் பள்ளிகளில் படித்தார். பிரிட்டனின் கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் பொருளாதாரம் படித்தார். கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் மாணவ அரசியல்வாதியாகி, தேர்தலில் போட்டியிட்டார்; அங்கு இவருக்கு ஜூனியராக இருந்த ராஜிவ், இவருக்கு ஆதரவளித்தார்.
நாடு திரும்பி, ஐ.எப்.எஸ்., தேர்வெழுதி, வெளியுறவு துறை இணை செயலரானார். கராச்சியில் இருந்த பாகிஸ்தான் துாதரகத்தில் பணியாற்றினார். அரசு பதவியை ராஜினாமா செய்து, காங்கிரசில் இணைந்தார்.
தங்களது பூர்விகமான தஞ்சை மாவட்டம், காருகுடியில் குடியேறி, மயிலாடுதுறை லோக்சபா தொகுதியில் போட்டியிட்டார். மூன்று முறை எம்.பி.,யாகவும், ஒருமுறை மத்திய அமைச்சராகவும் இருந்தார். இவரது 83வது பிறந்த தினம் இன்று!

