
ஏப்ரல் 17, 1981
புதுக்கோட்டை மாவட்டம், கத்தக்குறிச்சியில், சவுந்திரராஜன் - மணிமேகலை தம்பதியின் மகளாக, 1981ல் இதே நாளில் பிறந்தவர் சாந்தி.
இவர் சிறுவயதில், குடும்ப வறுமையால் செங்கல் சூளையில் வேலை பார்த்தார். வல்லத்திரக்கோட்டை பள்ளியில் 7ம் வகுப்பு படித்த போது, ஓட்டப்பந்தயத்தில் அசுர வேகத்தில் ஓடி முதல் பரிசை பெற்றார். தொடர்ந்து விளையாட்டு ஆசிரியர்களின் துாண்டுதலால் தடகளப் பயிற்சி பெற்று பரிசுகளை பெற்றார்.
புதுக்கோட்டை ஜெ.ஜெ., கல்லுாரி, சென்னை செயின்ட் ஜோசப் கல்லுாரிகளிலும் படித்த போது, பல்கலை, மாநில போட்டிகளில் பதக்கங்களை குவித்தார். 50 தேசிய பதக்கங்கள், 11 சர்வதேச பதக்கங்களை வென்று, 2006ல் தோஹா ஆசிய போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கத்தையும் வென்றார்.
இவரது உடலில் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அதிகம் சுரப்பதாக மருத்துவ அறிக்கை அளித்து, பதக்கத்தை பறித்ததுடன், விளையாடவும் தடை விதித்தது, சர்வதேச விளையாட்டு மன்றம். மீண்டும் செங்கல் சூளையிலேயே போராடிய இவர், தற்போது, திருச்சியில் தடகள பயிற்சியாளராக உள்ளார்.
தான் தவற விட்ட பதக்கத்தை, தன் மாணவர்களின் கைகளில் காண போராடும் வீராங்கனையின் 43வது பிறந்த தினம் இன்று!

