
ஏப்ரல் 24, 1934
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகில் உள்ள கண்ணந்தங்குடி கீழையூர் கிராமத்தில், 1934ல் இதே நாளில் பிறந்தவர் எல்.கணேசன். இவர் கல்லுாரியில் படித்த போது, ஹிந்தி திணிப்புக்கு எதிராக மாணவர்களை திரட்டி போராடினார். தி.மு.க.,வை அண்ணாதுரை துவக்கியபோது, அதன் மாணவரணி செயலராக இருந்தார். சட்டக் கல்லுாரியில் படித்தபோது வைகோவை அண்ணாதுரையிடம் அறிமுகம் செய்து வைத்தார்.
கடந்த 1967ல், ஒரத்தநாடு சட்டசபை தொகுதியில் இவர் போட்டியிட்ட போது, கருணாநிதி நாடகம் எழுதி, அதில் கிடைத்த 10,000 ரூபாயை தேர்தல் செலவுக்கு தந்து உதவினார். 1971, 1989 தேர்தல்களிலும் எம்.எல்.ஏ., ஆனார். 1989ல் முதல்வரின் பேரவை செயலராக இருந்தார். 1980ல் திருச்சி எம்.பி.,யாக தேர்வானார்.
கடந்த 1993ல் தி.மு.க.,வில் இருந்து வைகோ பிரிந்து ம.தி.மு.க.,வை துவக்கிய போது, இவரும் அதில் இணைந்து, அதன் அவைத் தலைவராகவும், திருச்சி எம்.பி.,யாகவும் இருந்தார். 2008ல் மீண்டும் தி.மு.க.,வில் இணைந்தார். தி.மு.க.,வின் சோழமண்டல தளபதிகளில் ஒருவரான எல்.ஜி.,யின் 90வது பிறந்த தினம் இன்று!

