
ஏப்ரல் 26, 1906
நாகப்பட்டினத்தில் கணேச அய்யரின் மகனாக, 1906ல் இதே நாளில் பிறந்தவர் பட்டு அய்யர். இவர் பள்ளியில் படித்த போதே பாடுவது, நடிப்பது உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றார். நாகை மணி என்ற பாடலாசிரியருடன் இணைந்து நாடக குழுவை துவக்கி, நாகப்பட்டினம், மாயவரம், திருவாரூர் உள்ளிட்ட இடங்களில் நாடகங்களை நடத்தினார்.
இவரின் நடிப்பை கண்ட ராவ்பகதுார் கே.எஸ்.வெங்கட்ராமய்யர் என்பவர் தன் பேத்தியின் கணவரும், இயக்குனருமான கே.சுப்ரமணியத்திடம் பரிந்துரைத்தார். கே.சுப்ரமணியம், 'நவீன சாரங்கதாரா' என்ற படத்தில் சித்திரசேனன் வேடத்தில் நடிக்க வைத்ததுடன், உதவி இயக்குனராகவும் சேர்த்து கொண்டார்.
தொடர்ந்து, 'பக்த குசேலா, குண்டலகேசி, அபூர்வ சகோதரர்கள்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். 'மிஸ்டர் அம்மாஞ்சி'யில் அப்பாவி அம்மாஞ்சியாக நகைச்சுவை வேடத்தில் நடித்தார். 'மகாத்மா உதங்கர், மன்மத விஜயம்' ஆகிய திரைப்படங்களையும் இயக்கினார். இவரது இறப்பு குறித்து தகவல்கள் கிடைக்கவில்லை.
'அவ்வையார்' திரைப்படத்தில் திருவள்ளுவரை கண்முன் காட்டியவரின் பிறந்த தினம் இன்று!
***

