
ஏப்ரல் 28, 2000
விருதுநகரில், சங்கரலிங்கம் - சிவகாமி தம்பதியின் மகளாக, 1933, டிசம்பர் 22ல் பிறந்தவர் கனசவுந்தரி எனும் ஷாலினி இளந்திரையன்.
இவரது தந்தை வணிக நிறுவன மேலாளராக மும்பை, மதுரை, விருதுநகரில் பணியாற்றினார். இவரும் அங்கெல்லாம் படித்தார். மதுரை டோக் பெருமாட்டி கல்லுாரியில் படித்த போது, தமிழ் மன்ற செயலராக இருந்தார். சென்னை மாநில கல்லுாரியில், 'சிலப்பதிகார சொல்வளம்' எனும் தலைப்பில் ஆய்வு செய்து முதுவர் பட்டமும், 'தமிழில் வாழ்க்கை வரலாற்று இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்' எனும் தலைப்பில் ஆய்வு செய்து, முனைவர் பட்டமும் பெற்றார்.
அங்கு கலை முதுவருக்கு படித்த சாலை இளந்திரையனை மணந்தார். திருச்சி ஹோலி கிராஸ், டில்லி தயாள்சிங், திருப்பதி திருவேங்கடவன் கல்லுாரிகளில் விரிவுரையாளராக பணியாற்றினார். 'ஆனந்த போதினி' இதழில் இலக்கிய கட்டுரைகளை, 'ஷாலினி' எனும் புனை பெயரில் எழுதினார். 'அறிவியக்க பேரவை' எனும் அமைப்பின் வாயிலாக சமூகப்பணிகள் செய்தார். தமிழை செம்மொழியாக்க வலியுறுத்தி, டில்லியில் நடந்த மாநாட்டுக்காக சென்ற போது 2000வது ஆண்டு இதே நாளில், விபத்தில் சிக்கி, தன் 67வயது வயதில் மறைந்தார். இவரது நினைவு தினம் இன்று!

