
மே 3, 1899
தென்காசி சங்கரலிங்கம் பிள்ளை - லட்சுமியம்மாள் தம்பதியின் மகனாக, 1899ல் இதே நாளில் பிறந்தவர் டி.எஸ்.சொக்கலிங்கம். தன் 21வது வயதில், சேலம் வரதராஜுலு நடத்திய, 'தமிழ்நாடு' பத்திரிகையில் பணியாற்றினார். பின் வ.ரா.சீனிவாசனுடன் இணைந்து 'மணிக்கொடி' இதழை துவக்கினார். 'காந்தி' இதழையும் நடத்தினார்.
சதானந்த் துவங்கிய, 'தினமணி' நாளிதழின் முதல் ஆசிரியராகி, ஏ.என்.சிவராமன், புதுமைப்பித்தன், சி.சு.செல்லப்பா, கு.அழகிரிசாமி உள்ளிட்டோரை உதவி ஆசிரியராக்கினார். பின் அதிலிருந்து விலகி, 'தினசரி, ஜனயுகம், பாரதம், நவசக்தி' உள்ளிட்ட பத்திரிகைகளை நடத்தினார். அனைத்திலும் புதுமைப்பித்தனை எழுத வைத்தார்.
லியோ டால்ஸ்டாயின், 'போரும் அமைதியும்' நாவலை மொழிபெயர்த்தார். நேரு, சுபாஷ் சந்திரபோஸ், காமராஜ் உள்ளிட்டோரின் வாழ்க்கை வரலாறு, முதுகுளத்துார் கலவரம், சிறுகதை, நாவல், கவிதைகளை எழுதிய இவர், 1966, ஜனவரி 6ல் தன் 67வது வயதில் மறைந்தார்.
'பேனா மன்னன்' பிறந்த தினம் இன்று!