
மே 6, 2016
சேலத்தில், பால் டேவிட் தேவநாதன் --- ஹன்னா தம்பதியின் மகளாக, 1935, ஜூன் 1ல் பிறந்தவர் லட்சுமி ஹோம்ஸ்ட்ராம். இவர், பெங்களூருவில் பள்ளி படிப்பையும், சென்னை பெண்கள் கிறிஸ்தவ கல்லுாரியில், ஆங்கில இலக்கியத்தையும் படித்தார். பிரிட்டனின், செயின்ட் ஹில்டாஸ் கல்லுாரி, ஆக்ஸ்போர்டு பல்கலையில், ஆர்.கே.நாராயண் படைப்புகளை ஆய்வு செய்தார்.
பிரிட்டனில், மார்க் ஹோம்ஸ்ட்ராமை மணந்தார். 'யுனெஸ்கோ'வின் இந்திய துாதரக நுாலகத்தில் பணியாற்றினார். பிரிட்டன் திரும்பி, நார்விச் என்ற இடத்தில் ஆசிரியராக பணியாற்றினார். தமிழ் எழுத்தாளர்களான மவுனி, புதுமைப்பித்தன், சுந்தரராமசாமி, அசோகமித்திரன், ந.முத்துசாமி, அம்பை, பாமா, இமையம் உள்ளிட்டோரின் படைப்புகளையும், பழந்தமிழ் இலக்கியங்களான, சிலப்பதிகாரம், மணிமேகலையையும், வசன நடையில், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
பிரிட்டன், கனடா, இந்தியா, இலங்கை பதிப்பாளர்களுக்கு மொழிபெயர்ப்பு பயிற்சி அளித்தார். தமிழ், இலக்கியத்தோட்டம், இயல் உள்ளிட்ட விருதுகளை பெற்றார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர், தன், 80வது வயதில், 2016ல் இதே நாளில் மறைந்தார்.
தமிழ் இலக்கியங்களை, உலக வாசகர்களுக்கு பொதுவாக்கிய, மொழிபெயர்ப்பாளர் மறைந்த தினம் இன்று!