
மே 8, 2005
திருநெல்வேலி மாவட்டம், உவரி கிராமத்தில், ஏ.டி.சி.பெர்னாண்டோ - வியாகுலம் தம்பதிக்கு மகனாக 1946, அக்டோபர் 14ல் பிறந்தவர் டி.சி.ஜான் எனும் வலம்புரி ஜான்.
சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த இவர், அண்ணன்களால் வளர்க்கப்பட்டார். பாளையங்கோட்டை துாய சவேரியார் பள்ளி, கல்லுாரி, சென்னை சட்ட கல்லுாரிகளில் படித்தார். தொடர்ந்து டி.லிட், பி.எச்டி., டிப்ளமா படிப்புகளை முடித்தார். 'தினமலர்' நாளிதழின் திருச்சி பதிப்பில் உதவி ஆசிரியர், பள்ளி ஆசிரியர் பணிகளை செய்தபின், வழக்கறிஞர் பணியும் செய்தார்.
எம்.ஜி.ஆரின், 'தாய்' பத்திரிகையின் ஆசிரியரானார். தி.மு.க., ஜனதா, அ.தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளில் இருந்தார். அ.தி.மு.க., சார்பில் ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்தார். சட்ட மேலவை உறுப்பினர், தமிழக வேளாண் தொழில் வாரிய சட்ட ஆலோசகராகவும் பணியாற்றினார்.
அரசியல், இலக்கியம், சித்த மருத்துவம் சார்ந்த நுால்களை எழுதியதுடன், 'கவிதாபானு' என்ற பதிப்பகத்தையும் நடத்தினார். சில படங்களுக்கு பாடல், கதை, வசனம் எழுதிய இவர், தன் 59வது வயதில் இதே நாளில் மறைந்தார்.
'வார்த்தை சித்தர்' மறைந்த தினம் இன்று!

