
மே 9, 1955
மயிலாடுதுறையில் தேசிங்குராஜனின்மகனாக, 1955ல் இதே நாளில் பிறந்தவர் டி.ராஜேந்தர். இவர், எம்.ஏ., படித்த போது, ஒரு தலை ராகம் கதையை எழுதினார். இப்ராகிம் தயாரிப்பில் இவர் இயக்கிய அப்படம், தயாரிப்பாளர் இயக்கியதாக வெளியானது. கல்லுாரி வாழ்க்கையை பிரதிபலித்து, பெரு வெற்றி பெற்ற இதில் வசனம், பாடல்கள், இசையை இவரே தந்தார்.
தொடர்ந்து, வசந்த அழைப்புகள், ரயில் பயணங்களில், கிளிஞ்சல்கள் உள்ளிட்ட படங்களை தானே எழுதி, தயாரித்து, இயக்கி, இசை, பாடல்களை தந்தார். தொடர்ந்து, புதுமுகங்களுக்கு வாய்ப்பளித்தார். அடுக்குமொழி வசனங்கள், பிரமாண்ட செட்களால்தனக்கென தனி பாணியை உருவாக்கிய இவர், தங்கைக்கோர் கீதம் படத்தில் நாயகனானார்.
உறவை காத்த கிளி படத்தில் தன் மகன் சிலம்பரசனை நடிகராக்கினார். ஆரம்ப காலத்தில் தி.மு.க.,வில் இருந்தவர், பின் தனி கட்சி துவங்கி, மீண்டும் தி.மு.க.,வில் இணைந்து எம்.எல்.ஏ., ஆனார். சிறுசேமிப்பு துணை தலைவர் பதவியை, இலங்கை பிரச்னைக்காக உதறினார்.
திரையுலகின் அஷ்டவதானியின் 69வது பிறந்த தினம் இன்று!