
மே 19, 1964
கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர் சித்த லிங்கையாவின் மகனாக, 1964ல் இதே நாளில் பிறந்தவர் முரளி. இவரது தாய் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதால், தமிழகத்தில் படித்தார். தந்தையின் இயக்கத்தில், பிரேம பர்வா என்ற கன்னட படத்தில் அறிமுகம் ஆனார்.
தமிழில், பூவிலங்கு படத்தில் அறிமுகமானார். இவர் நடித்த, பகல் நிலவு, கீதாஞ்சலி, நினைவுச்சின்னம் உள்ளிட்ட படங்கள் வெற்றியடைந்தன. விக்ரமன் இயக்கத்தில் நட்பின் பெருமையை சொல்லும், புது வசந்தம் மாபெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து, ஒருதலை காதலின் வலியை உணர்த்தும், இதயம் திரைப்படம் கல்லுாரி மாணவர்களால் பாராட்டப்பட்டது.
சின்ன பசங்க நாங்க, என் ஆசை மச்சான், காலமெல்லாம் காதல் வாழ்க, பொற்காலம் உள்ளிட்ட வெற்றி படங்களை தந்த இவர், கடல் பூக்கள் படத்தில் சிறந்த நடிகர் விருதையும் பெற்றார். தன் மகன் அதர்வாவுடன், பானா காத்தாடி படத்தில் நடித்த நிலையில், 46வது வயதில், 2010, செப்டம்பர் 8ல், திடீர் மாரடைப்பால் மறைந்தார். இவரது பிறந்த தினம் இன்று!

