
மே 29, 2008
துாத்துக்குடியில், பொன்னையா பாண்டியன் - சண்முகத்தம்மாள் தம்பதியின் மகளாக, 1931, ஜூன் 24ல் பிறந்தவர் டி.பி.முத்துலட்சுமி. இவர் எட்டாம் வகுப்பு படித்தபோது திரைப்படத்தில் நடிக்கும் ஆசையால், பெற்றோரிடம் சொல்லாமல் சென்னை வந்தார்.
சென்னையில், திரைப்பட இயக்குனர் கே.சுப்ரமணியத்திடம் நடன கலைஞராக பணியாற்றிய இவரது மாமா எம்.பெருமாளிடம் நடனமும், பாட்டும் கற்றார். சந்திரலேகா திரைப்படத்தில் வரும் முரசு நடனக்குழுவில் நடனமாடினார். டி.ஆர்.ராஜகுமாரி உள்ளிட்ட நடிகையருக்கு டூப் நடனமாடினார்.
பொன்முடி படத்தில் இவரது நகைச்சுவை நடிப்பு புகழ் பெற்றது. தொடர்ந்து, ஓர் இரவு, திரும்பிப்பார், இருவர் உள்ளம் உள்ளிட்ட படங்களில் சிவாஜி, தங்கவேலு, எம்.ஆர்.ராதா உள்ளிட்டோரின் மனைவியாக நகைச்சுவை வேடத்தில் நடித்து முக்கிய நாயகியாக வளர்ந்தார். 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர், தன் 77வது வயதில், 2008ல் இதே நாளில் மறைந்தார்.
இயக்குனர் டி.பி.கஜேந்திரனை வளர்ப்பு மகனாக்கிய நடிகை மறைந்த தினம் இன்று!