
ஜூன் 1, 1970
பீஹார் மாநிலம், ஜாம்ஷெட்பூரில், தமிழ் பிராமணர்களான ரங்கநாதன் -- சரோஜா தம்பதியின் மகனாக, 1970ல் இதே நாளில் பிறந்தவர் மாதவன். இவர், ஜாம்ஷெட்பூரில், எலக்ட்ரானிக்ஸ் பாடத்தில் பட்டப் படிப்பை முடித்தார். கோலாப்பூர் கல்வியகத்தில் ஆளுமைத்திறன் பயிற்றுனர், மாடல், தொலைக்காட்சி நெறியாளர், ஹிந்தி தொடர்களில் நடித்து, ஹிந்தி, கன்னட படங்களில் நடித்து வந்தார்.
மணிரத்னத்தின், இருவர் பட நாயகனாக தேர்வாகி, தன் இளவயது தோற்றத்தால் வாய்ப்பிழந்தார். 'அலைபாயுதே' படத்தில் அறிமுகமாகி, காதல் ததும்பும் நடிப்பால், 'சாக்லேட் பாய்' ஆனார். கோல்ப் விளையாட்டு வீரரான இவர், மின்னலே, டும் டும் டும், கன்னத்தில் முத்தமிட்டால், ரன், ரெண்டு, அன்பே சிவம், ஆயுத எழுத்து உள்ளிட்ட படங்களில், நாயகன், இரண்டாம் நாயகன், வில்லன் பாத்திரங்களில் நடித்தார். சிறு இடைவெளிக்கு பின், குத்துச்சண்டை பயிற்சியாளராக, 'இறுதிச்சுற்று' படத்தில் நற்பெயர் பெற்று, ராக்கெட்ரி; நம்பி விளைவு படத்தால் இயக்குனராகவும் மாறினார்.
ஹிந்தி வெப் சீரிஸ்களிலும் கலக்கும், 'மேடி'யின் 54வது பிறந்த தினம் இன்று!

