
ஜூன் 3, 1924
நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையில், இசை வேளாளர் குடும்பத்தில், முத்துவேல் - அஞ்சுகம் தம்பதியின் மகனாக, 1924ல் இதே நாளில் பிறந்தவர், மு.கருணாநிதி.
திருக்குவளை துவக்கப்பள்ளி, திருவாரூர் நாட்டாண்மை உயர்நிலைப் பள்ளிகளில் படித்தார். பள்ளியில் மாணவர் மன்றத்தை நிறுவி, நாடகம், கவிதைகளை எழுதியதுடன், 'மாணவ நேசன்' என்ற பத்திரிகையையும் நடத்தி, பள்ளி இறுதித்தேர்வில் தோல்வியடைந்தார். பின் , 'முரசொலி' என்ற பத்திரிகையையும் துவக்கினார்.
அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட இவர், நீதிக்கட்சியில் சேர்ந்தார். ஈ.வெ.ரா., அண்ணாதுரை உள்ளிட்ட தலைவர்களுடன் நெருங்கி பழகி, தி.க., - தி.மு.க.,வில் வளர்ந்தார். 75 திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதி புகழ்பெற்றார். ஹிந்தி ஒழிப்பு போராட்டத்தில் கல்லக்குடியில் கைதானார். குளித்தலையில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ.,வானார்.
தி.மு.க.,வின் பொருளாளர், தலைவராக வளர்ந்தார். 13 முறை பல தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் வென்றார். அண்ணாதுரை இறந்த பின், தமிழக முதல்வரான இவர், ஐந்து முறை அந்த பதவி வகித்தார். பகுத்தறிவு சிந்தனையால் பல்வேறு துறைகளில் சீர்திருத்த திட்டங்களை செயல்படுத்தினார். இவர் தன், 94வது வயதில், 2018, ஆகஸ்ட் 7ல் மறைந்தார்.
திரை, அரசியல் துறைகளின், 'கலைஞர்' பிறந்த தினம் இன்று!