
ஜூன் 6, 1997
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங் குடியில், 1932, டிசம்பர் 12ல் பிறந்தவர் சோமு. திரைக்கதை எழுதும் ஆர்வத்தில் இருந்த இவரை, நண்பர்புரட்சிதாசன், தயாரிப்பாளர் சின்னப்பாதேவரிடம் அறிமுகம் செய்தார். அவர், யானைப்பாகன் படத்தில் பாட்டெழுதும் வாய்ப்பை தந்தார்.
'ஆம்பளைக்கு பொம்பளை அவசியந்தான்' என்ற நகைச்சுவை பாடலை எழுத, ஏ.எல்.ராகவன் - எல்.ஆர்.ஈஸ்வரி பாடி பிரபலமானது. தொடர்ந்து, 'கலையரசி, காஞ்சி தலைவன்' உள்ளிட்ட படங்களுக்கு பாடல்கள் எழுதினார். தெய்வத்தாய் படத்தில், எம்.ஜி.ஆருக்காக எழுதிய, 'ஆண்டவன் உலகத்தின் முதலாளி' என்ற பாடல் மிகவும் பிரபலமானது.
தொடர்ந்து, 'கண்களும் காவடி சிந்தாகட்டும், மலருக்கு தென்றல் பகையானால், துள்ளுவதோ இளமை' உள்ளிட்ட இவரது பல பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகின. தமிழக அரசின், 'கலைமாமணி' விருது பெற்ற இவர், தன் 65வது வயதில், 1997ல் இதே நாளில் மறைந்தார்.
'ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை' என்ற பாடலால், அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்திய கவிஞரின் நினைவு தினம் இன்று!