
ஜூன் 8, 1930
இலங்கையின் மலையகத்தில், நுவரெலியா தோட்டத்தில், நடேசன் - ரத்தினம் தம்பதியின் மகனாக, 1930ல் இதே நாளில் பிறந்தவர் ர.ந.வீரப்பன்.
தமிழகத்திற்கு புலம்பெயர்ந்த இவர், பின்னர் மலேஷியாவில் குடியேறி, அதை தாய்நாட்டை போல மதித்தார். அங்கிருந்த தமிழ் பள்ளிகளில் தமிழாசிரியராக சேர்ந்து தமிழ் கற்பித்தார். 'உலகத் தமிழர் குரல்' என்ற இதழை நடத்தினார்.
மலாய் தமிழ் -- ஆங்கில அகராதியை தொகுத்தார். 'மலேஷிய தமிழர்கள், உலகத் தமிழர், இலக்கிய இதயம்' உள்ளிட்ட 33 நுால்களை வெளியிட்டார். தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தை துவங்கி, உலகத் தமிழர்கள் பழக தளம் அமைத்த இவர், அதன் தலைவராகவும் செயல்பட்டார்.
தமிழர்களின் பண்பாடான பெண்மையை மதிக்கும் தன்மையை வெளிப்படுத்த, தன் பெயரின் முன், தாய், தந்தையின் முதல் எழுத்துக்களை இணைத்துக் கொண்டார். தன் 69வது வயதில், 1999, செப்டம்பர் 3ல் மறைந்தார்.
தமிழர்களை இணைத்த எழுத்தாளர் பிறந்த தினம் இன்று!