
ஜூன் 11, 1983
ராஜஸ்தான் மாநிலம், ஜுன்ஜுன் மாவட்டத்தில் உள்ள பிலானியில், மார்வாடி குடும்பத்தில் 1894, ஏப்ரல் 10ல் பிறந்தவர் கன்ஷ்யாம்தாஸ் பிர்லா எனும் ஜி.டி.பிர்லா.
சிறுவயதில், கணிதம், ஹிந்தி கற்று, தந்தையுடன் வட்டி, தரகு தொழில் செய்தார். தன் 16வது வயதில், புதிதாக சணல் தொழிற்சாலையை துவக்கி, பிரிட்டிஷ் அரசின் நெருக்கடிக்கு ஆளானார். முதல் உலக போருக்கு பின், குவாலியரில் ஜவுளி ஆலையை துவங்கி, ரேயான் துணிகளை பிரபலமாக்கினார்.
இந்திய சுதந்திர போராட்டத்துக்கு நிதி உதவி செய்தார். மகாத்மா காந்தியின் பொருளாதார ஆலோசகராகவும் இருந்தார். மத்திய சட்டசபை உறுப்பினராக தேர்வானார். இந்திய வர்த்தகர், தொழில் கழகத்தை துவக்கி, அதன் தலைவரானார்.
பல முன்னணி நிறுவனங்களை வாங்கி பிர்லா குழுமமாக்கினார். சுதந்திரத்துக்கு பின், பிரிட்டிஷாரின் தேயிலை, ஜவுளி நிறுவனங்களை வாங்கியதுடன், சிமென்ட், தகவல் தொழில்நுட்ப துறைகளில் காலுான்றினார். யூகோ வங்கி, பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி உள்ளிட்டவற்றை துவக்கி வளர்த்த இவர், 1983ல் தன் 89வது வயதில் இதே நாளில் மறைந்தார்.
இந்திய தொழில் துறைக்கு வித்திட்ட முன்னோடியின் நினைவு தினம் இன்று!

