
ஜூன் 13, 1987
ஜி.வெங்கடேஷ் - ஏ.ஆர். ரெய்ஹானா தம்பதியின் மகனாக, சென்னையில், 1987ல் இதே நாளில் பிறந்தவர் ஜி.வி.பிரகாஷ்குமார். சிறு வயதிலேயே இசைப்பதிலும், பாடுவதிலும் ஆர்வமாக இருந்த இவரை, தாய் மாமாவான ஏ.ஆர்.ரஹ்மான், ஜென்டில்மேன் திரைப்படத்தில், 'சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே...' பாடலின் துவக்க வரிகளை பாட வைத்தார்.
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுடன் இணைந்து, அந்நியன், உன்னாலே உன்னாலே திரைப்படங்களில் பாடினார். வசந்தபாலன் இயக்கிய, வெயில் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, மதராசப்பட்டினம், ஆயிரத்தில் ஒருவன், ஆடுகளம், அங்காடித் தெரு, தெறி உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தார்.
டார்லிங் படத்தில் நடிகராக அவதாரம் எடுத்தவர், மத யானைக் கூட்டம் திரைப்படத்தில் தயாரிப்பாளராகவும் மாறினார். சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது உள்ளிட்டவற்றுடன், மொழிகளை கடந்து கண்ணுக்கும், காதுக்கும் விருந்தளித்து வருகிறார்.
'இசை - நாயகனின்' 37வது பிறந்த தினம் இன்று!