
ஜூன் 21, 1945
ராமநாதபுரம் மாவட்டம், விளத்துாரில், 1945ல் இதே நாளில் பிறந்தவர் தியாகராஜன் சிவானந்தம். இவர், பிரபல ஆடியோ நிறுவனத்தில் பணி செய்தார். அப்போது, இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குனர் பாரதிராஜாவின் நண்பரானார். மூவரும் இணைந்து, 'ராஜாஸ் சினி கம்பைன்ஸ்' என்ற வினியோக நிறுவனத்தை துவக்கி, படங்களை வெளியிட்டனர்.
பாரதிராஜாவின் இயக்கத்தில் உருவான, அலைகள் ஓய்வதில்லை படத்தில் ராதாவின் முரட்டு அண்ணனாக, வில்லனாக அறிமுகமானார். தொடர்ந்து, டிக் டிக் டிக், பாயும் புலி, பகவதிபுரம் ரயில்வே கேட், நீங்கள் கேட்டவை உள்ளிட்ட படங்களுக்கு பின் நடித்த, மலையூர் மம்பட்டியான் படத்தால் புகழ் பெற்றார்.
பூவுக்குள் பூகம்பம் படத்தின் வாயிலாக இயக்குனரான இவர், சேலம் விஷ்ணு, ஆணழகன், மன்னவா, ஜெய் உள்ளிட்ட படங்களை இயக்கினார். அதே காலகட்டத்தில் இவரது மகன் பிரஷாந்த் கதாநாயகனாக நடித்ததால், தன் நடிப்பை கைவிட்டார். கலை இயக்குனர், ஆடை வடிவமைப்பாளர், கவுரவ தோற்றத்துடன், தயாரிப்பாளராகவும் பல படங்களில் பங்களித்தார். இவரது 79வது பிறந்த தினம் இன்று!

