
ஜூன் 23, 1861
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடை மருதுாருக்கு அருகில் உள்ள மாங்குடியில், தியாகராஜ அய்யரின் மகனாக, 1861ல் இதே நாளில் பிறந்தவர் சதாசிவ அய்யர். கும்பகோணம் அரசு கல்லுாரியில் பி.ஏ., சென்னை மாநில கல்லுாரியில் பி.எல்., பட்டங் களை பெற்றார். ராஜா ராமாராவ், குருமூர்த்தி உள்ளிட்டோரிடம் பயிற்சி பெற்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞரானார்.
எம்.எல்., பட்டம் பெற்று, அரியலுார், மதுரை மாவட்ட முன்சீப்பாக பதவி வகித்தார். 1912ல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியானார். ஹிந்துக்களிடம் இருந்த காலத்துக்கு ஒவ்வாத நடைமுறைகளுக்கு எதிராக பல தீர்ப்புகளை வழங்கினார். பிரம்ம ஞானசபை தேசிய பல்கலையின் வேந்தராக தாகூர் இருந்தபோது, துணை வேந்தராக இருந்தார்.
பிராமண குடும்பங்களில் இருந்த குழந்தை திருமணம், சிறார் விதவை சடங்குகளுக்கு எதிராக, 'ஹிந்து ரிபார்மர், பாலிட்டீஷியன்' பத்திரிகைகளில் எழுதினார். விதவை திருமணங்களை நடத்தி வைத்தார். பூர்வீக சொத்துக்களை, ஆதிதிராவிட பள்ளி, கோவிலுக்கு வழங்கினார். இவர் தன் 66வது வயதில், 1927, டிசம்பர் 1ல் மறைந்தார்.
தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறையின் முதல் தலைவர் பிறந்த தினம் இன்று!

