
ஜூன் 27, 1952
திருநெல்வேலி மாவட்டம், சிந்தாமணியில், ராமசாமியின் மகனாக, 1916, மே 18ல் பிறந்தவர் சி.ஆர்.சுப்புராமன். இவர் சிறுவயதில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் தங்கி, நாதஸ்வர வித்வான்களிடம் கர்நாடக இசை கற்று, 14வது வயதில் நாதஸ்வரத்தில் தேர்ச்சி பெற்றார்.
ஜி.ராமநாதனின் சகோதரர் சுந்தர பாகவதரின் பரிந்துரையால், எச்.எம்.வி., நிறுவனத்தில் ஹார்மோனியம் வாசிப்பவராக சேர்ந்தார். தன் 16வது வயதில், செஞ்சு லெட்சுமி என்ற தெலுங்கு படத்திற்கு இசையமைத்தார். பானுமதியின் நிறுவனமான பரணி பிக்சர்ஸ் தயாரித்த, ரத்னமாலா படத்திற்கு இசையமைத்து, தமிழில் அறிமுகமானார்.
தொடர்ந்து, லைலா மஜ்னு, தேவதாஸ், ராஜமுக்தி, பைத்தியக்காரன், நல்லதம்பி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தார். இவரிடம் எம்.எஸ்.விஸ்வநாதன் உதவியாளராக இருந்தார். கண்டசாலா, எம்.எல்.வசந்தகுமாரி உள்ளிட்ட பாடகர்களை அறிமுகம் செய்த இவர், 1952ல் தன், 36வது வயதில் இதே நாளில் மறைந்தார்.
இசையமைப்பாளர், பாடகர், தயாரிப்பாளர் எனும் பன்முக கலைஞர் மறைந்த தினம் இன்று!