
ஜூன் 28, 1915
கோவை மாவட்டம், ராமநாதபுரத்தில், அய்யாவு தேவர் - ராமாக்காள் தம்பதியின் மகனாக, 1915ல், இதே நாளில் பிறந்தவர், சாண்டோ சின்னப்பா தேவர். ஐந்தாம் வகுப்பு வரையே படித்த இவர், பல்வேறு வேலைகளை செய்தார். பின், உடற்பயிற்சியாளரானார் 'ஜூபிடர் பிக்சர்ஸ்' தயாரித்த படங்களில் சண்டை கலைஞராக நடித்தார்.
அங்கு ஒப்பந்த நடிகர்களாக இருந்த எம்.ஜி.ஆர்., நம்பியார் உள்ளிட்டோருடன் பழகி, அவர்களுக்கு கத்தி, கம்பு சண்டை நுணுக்கங்களை கற்பித்தார். 'தேவர் பிலிம்ஸ்' எனும் தயாரிப்பு நிறுவனத்தை துவக்கி, எம்.ஜி.ஆர்., நடிக்க, தன் தம்பி திருமுகம் இயக்க, தாய்க்கு பின் தாரம் படத்தை தயாரித்து வெற்றி பெற்றார்.
எம்.ஜி.ஆர்., நடிப்பில், தாய் சொல்லை தட்டாதே, தாயை காத்த தனயன், தர்மம் தலை காக்கும், வேட்டைக்காரன், நல்லநேரம் உள்ளிட்ட 16 படங்களை தயாரித்தார். ராஜேஷ்கண்ணா நடிப்பில், ஹாத்தி மேரா சாத்தி என்ற ஹிந்தி படத்தையும் தயாரித்தார். தன் படங்களில் விலங்குகளை நடிக்க வைத்தார். தீவிர முருக பக்தரான இவர், 1978 செப்., 8ல் தன், 63வது வயதில் மறைந்தார்.
நடிகர் - நடிகையருக்கு பேசிய சம்பளத்தை முதலிலேயே மொத்தமாக கொடுத்து, சொன்ன தேதியில் படத்தை முடித்து வெளியிட்ட தயாரிப்பாளர் பிறந்த தினம் இன்று!

