
செப்டம்பர் 1, 1929
மதுரை வழக்கறிஞர் கணேசஅய்யரின் மகனாக, 1929ல் இதே நாளில் பிறந்தவர் ஜி.நாகராஜன். பள்ளி படிப்பை முடித்து, மதுரை கல்லுாரியில் புதுமுக வகுப்பில் சேர்ந்து, கணிதத்தில் முழு மதிப்பெண்ணுடன் தங்கப்பதக்கம் பெற்றார். அங்கேயே முதுநிலை பட்டம் வரை படித்து, காரைக்குடி கல்லுாரியில் ஆசிரியராக சேர்ந்தார்.
பின், சென்னை கணக்காயர் அலுவலகத்திலும், மதுரை அமெரிக்கன் கல்லுாரியிலும் பணியாற்றினார். கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்ட இவர், அமெரிக்காவில் கிடைத்த உயர்கல்வி வாய்ப்பை நிராகரித்து, கட்சி பணியில் ஈடுபட்டார். அப்போது, சுந்தரராமசாமி, ஜெயகாந்தன் உள்ளிட்டோருடன் பழகினார்.
'ஜனசக்தி' இதழில், பல சிறுகதைகளை எழுதினார். இவரது, 'குறத்தி முடுக்கு, நாளை மற்றும் ஒரு நாளே' நாவல்கள் பிரசித்தி பெற்றன. இவர், 1981, பிப்ரவரி 19ல் தன் 52வது வயதில் மறைந்தார்.
அரசியலுக்காக ஆசிரியர் பணியை துறந்த எழுத்தாளர், 'ஜி.என்.,' பிறந்த தினம் இன்று!